பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


சென்று துப்பறிவதே போலிஸாரின் முக்கிய வேலையாக இருந்தது. அவர்கள் கோயில்களில் பாதிரிமார்கள் செய்த மதப் பிரசங்கங்களைக்கூட சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு போவது வழக்கம். அவர்கள் மொத்தம் சுமார் பதினாயிரம் பேர்கள் இருந்தனர். ஒவ்வொரு கிராமம் அல்லது நகரத்தினுடைய அளவுக்குத்தக்கபடி இரண்டு முதல் இருபது பேர்வரை நாடெங்கும் போலிஸார் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தப் போலிஸாரின் உதவி இல்லாவிடின் அயர்லாந்தில் இருந்த நாற்பதினாயிரம் ஆங்கிலத்துருப்புகளும் எவ்வித வேலையும் செய்யமுடியாது. ஏனென்றால் படை வீரர்களுக்கு நாட்டைப் பற்றியும் நாட்டிலுள்ள ஜனங்களின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் ஒன்றும் தெரியாது. ஜனங்களோடு நெருங்கிப் பழகி உளவறிந்து சொல்வதற்கு ஐரிஷ் போலிஸ்படையே ஆங்கில அரசாங்கத்தின் மூளை என்று சொல்லலாம். இந்தப் படை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர்ரொபர்ட்பீல் என்பவரால் அமைக்கப்பட்டதால், ஐரிஷ் போலிஸாரை ஐனங்கள் பீலர்கள் என்று ஏளனமாக அழைப்பது வழக்கம்.

இனி நம்முடைய சரித்திரத்தைக் கவனிப்போம். யுத்த ஆரம்ப முதல், தான்பிரீனும் அவனுடைய தோழர்களும் தங்களுடைய சொந்த வேலைகளுக்கிடையே அடிக்கடி கூடி யுத்தப்பயிற்சியை இடைவிடாது நடத்தி வந்தார்கள். அத்துடன் துப்பாக்கி, ரிவால்வர் முதலிய ஆயுதங்கள் எங்கு எங்கு கிடைக்கும் என்று தேடிச் சேர்த்து வந்தார்கள். அக்காலத்தில் தொண்டர்களிடம் ஆயுதங்கள் மிகச் சுருக்கமாகவே இருந்தன. 1915 ஆம் ஆண்டு முழுவதும் 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் இவ்வாறு பயிற்சி செய்வதிலும் ஆயுதங்கள் சேர்ப்பதிலும் கழிந்தன. 1916ஆம் ஆண்டு ஈஸ்டர் விழாவின் போது அயர்லாந்தில் சுதந்திரத்திற்காக ஒரு பெரிய கலகம் நடந்தது. அக்காலத்தில் திப்பெரரித் தொண்டர்கள் அதிகம் பங்கெடுத்துக் கொள்ள முடியாமல் போயிற்று. ஏனென்றால் அக்கலகத்தை நடத்திய மேலதிகாரி அவர்களுக்குச் சரியான உத்தரவு அனுப்பவில்லை. ஒன்றுக் கொன்று முரண்பட்ட பல உத்தரவுகளினால் அவர்கள் தீவிரமாக எதையும் செய்ய முடியாது போயிற்று.

1916 ஆம் ஆண்டு வருடத்துக் கலகம் ஜனங்களிடையே ஒரு பெரிய மாறுதலை உண்டுபண்ணிவிட்டது. அதுவரை ஸின்பினர்களை மதியாமல் இருந்தவர்கள் திடீரென்று அவர்களிடம் அதிக அபிமானம் காட்ட ஆரம்பித்தார்கள். ஆனால் தொண்டர்களுடைய படை அப்பொழுது போதிய வல்லமை பெற்றிருக்கவில்லை. ஆயிரக்கணக்காக தொண்டர்களை அரசாங்கத்தார் பிடித்து நாடு கடத்தி இங்கிலாந்துக்கு அனுப்பி விட்டனர். தொண்டர்களுடைய ஆயுதங்கள் பலவற்றைப் போலிஸாரும் ராணுவத்தாரும் பறித்துக் கொண்டு போய்விட்டனர். தொண்டர்கள் வெளிப்படையாகப் பயிற்சி பெறவோ, அணிவகுத்துச் செல்லவோ கூடாது ஏன்றும் நாடெங்கும் விளம்பரஞ் செய்யப்பட்டது. சிறிது

37