பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


வைசிராயைத் தாக்கச் சென்ற பதினொரு வாலிபரில் ஒன்பது பேருக்குக் காயமில்லை; லாவேஜ் வீரசுவர்க்கம் புகுந்தான்; தான்பிரீன் காலில் அடிபட்டு ரத்தம் பெருகிக் கொண்டேயிருக்கவும், சைக்கிளில் சவாரி செய்துக் கொண்டு சென்றான். உயிர்தப்பிய பதின்மரில் ராபின்ஸனுடைய சைக்கிள் இடையில் உடைந்து பிரயாணத்திற்கு உதவாது போயிற்று. எனவே அவன் ஸின்டிரீஸியின் சைக்கிளில் அவனுக்குப் பின்னால் ஏறி நின்று கொண்டு சென்றான். ஒரு சைக்கிளில் இருவரைத் தாங்கி வேகமாகச் செல்லமுடியாது. வேகமாய்ச்செல்லாவிடின் பகைவர்கள் எட்டிப் பிடித்து விடுவார்கள். அந்நிலையில் எதிரே ஒருவன் கைக்கிளில் வந்து கொண்டிருந்தான். ராபின்ஸன் கீழே குதித்து, ரிவால்வரை அவனுக்கு நேராகப் பிடித்து, அவனைக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டான். வந்தவன் மறுப்பேச்சில்லாமல் சைக்கிளைக் கொடுத்துவிட்டான். ராபின்லன் தான் திருடனில்லை என்றும், தனக்கு அந்த சைக்கிள் தேவை என்றும், அன்று மாலையில் அதை 'கிரெஷாம் ஹோட்ட'லில் வைத்து விடுவதாயும், அங்கு வந்து அவன் எடுத்துக் கொள்ளலாம் என்றுக் கூறினான். பிறர் சைக்கிளைப் பிடுங்கினாலும் அதிலும் ஒரு மரியாதை இருந்தது: திருட்டுச் சொத்து வேண்டாமென்று ராபின்ஸன் சொன்ன வாக்குப்படியே பின்னால் செய்து விட்டான். சொந்தக்காரன் அந்த ஹோட்டலுக்குச் சென்று சைக்கிளை எடுத்துக் கொண்டானோ, இல்லையோ என்பது தெரியாது. பிறகு பத்துப் பேர்களும் செளக்கியமாக டப்ளின் நகருக்குள் சென்று மறைந்துவிட்டனர்.

இவர்கள் யார்? எதற்காக இம்மாதிரிக் காரியங்களைப் புரிந்தார்கள்? இவர்கள் ஜரிஷ் புரட்சிக் கூட்டத்தார். அயர்லாந்தைக் கொடுமையாக ஆண்டுவந்த ஆங்கில அரசாங்கத்தை அழித்து, அங்கு குடியரசை ஸ்தாபிக்கும் நோக்கத்துடன் புரட்சி செய்து வந்த கூட்டத்தாரில் இவர்கள் முக்கியமானவர்கள். தான்பிரீன் இவர்களுடைய தலைவன். இவர்கள் அனைவரும் யுத்தப் பயிற்சி பெற்று, புரட்சிப் பட்டாளத்தில் பதவிகள் வகித்து வந்தார்கள்.

லார்ட் பிரெஞ்ச் அரசாங்கத் தலைமைப் பதவி வகித்து வந்ததால், அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டால், ஆங்கில அரசாங்கத்தை அயர்லாந்து மக்கள் விரும்பவில்லை என்பது உலகமெங்கும் விளக்கமாய்த் தெரிந்துவிடும் என்பதும், அதிலிருந்து உள்நாட்டில் புரட்சி கொழுந்து விட்டெரியும் என்பதுமே புரட்சிக் காரர்களின் கருத்து.

புரட்சிக்காரர்கள் வைசிராயைச் சுட்டுக் கொன்றதாக எண்ணிக் கொண்டார்களே தவிர, அவர் இறக்கவில்லை, காயப்படவுமில்லை, ஏனெனில், வழக்கத்திற்கு விரோதமாக அவர் அன்று முதல் காரிலேயே சென்று விட்டார்.

32