பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ப. ராமஸ்வாமி


கிளான்ஸி முதலியோர் அவனை ஆதரித்தனர். ஆனால் டெயில் ஐரோனோ, தொண்டர் படையின் தலைமை அதிகாரிகளோ தான்பிரீனை ஆதரிக்கவில்லை. மைக்கேல் காலின்ஸ் மட்டும் கொஞ்சம் ஆதரவு காட்டினார்.

உண்மை என்னவென்றால் தலைவர்களுக்குத் தீவிரமான எந்த வேலையும் பிடிக்கவில்லை. தொண்டர்கள் தங்களுக்கும் அவர்களுக்கும் இருந்த வேற்றுமைகளைப் பகைவர்களுக்குத் தெரியும்படியாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

பொது மக்களும் யுத்தத்தை விரும்பவில்லை. 1918ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர்கள் கொடுத்த வாக்கினாலேயே குடியரசை ஏற்படுத்துவதற்கு முடிந்தது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். போலிஸாரைத் தாக்குவதால் சட்ட விரோத உத்தரவுகளும், கைது செய்வதும் மேலும் அதிகரிப்பதைக் கண்டு அவர்கள் அஞ்சினார்கள்.

தான்பிரீன் டப்ளினில் அதிக நாள் தங்க விரும்பவில்லை. விரைவாகத் திப்பெரரிக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். அங்கு தொண்டர்கள் எதற்கும் தயாரயிருந்தபோதிலும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு தலைவன் வழிகாட்ட வேண்டிய அவசியம் இருந்தது. ஆதலால் தான்பிரீனும் டிரீஸியும் நூறுமைல்கள் சைக்கிளில் பிரயாணம் செய்து திப்பெரரியையடைந்தனர். பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு தான்பிரீன் அப்பொழுதுதான் திப்பெரரியை மீண்டும் கண்ணுற்றான்.