பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லகிலுள்ள எல்லாத் தேசியப் போராட்டங்களுக்கும் ஆதர்சமாகத் திகழ்வது அயர்லாந்து விடுதலைப் போராட்டமாகும். ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய விடுதலைப் பேராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களிற் பலருக்கு அயர்லாந்து விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துக்காட்டாக இருந்தது போலவே இன்று ஈழத் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் அது உத்வேகமும் உற்சாகமும் தந்து வருகின்றது. தமிழ்நாட்டிலும் அதனைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்து வருகிறது.

அயர்லாந்தின் நீண்ட புரட்சிப் போராட்டத்திலே களம்புகுந்து வீரச் செயல்கள் புரிந்த நாயகர்களில் ஒருவரான தான்பிரீன் என்பாரின் வரலாறே இந்த நூல். இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான ப. ராமஸ்வாமியால் 1932-34 இல் எழுதப்பட்டு 1947இல் வெளிவந்த இந்த நூல் ஈழப் போராளிகளால் 1980 களில் கண்டெடுக்கப்பட்டு யாழ் நகரில் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது. ஈழத்திலிருந்து தமிழகத்திற்குத் திரும்பி வந்திருக்கும் இந்த நூல் ஈழ அறிஞர்கள் எழுதிய முன்னுரை, அயர்லாந்து போராட்டம் பற்றிய சுருக்கமான வரலாறு, தான்பிரீனைப் பற்றிய குறிப்பு, விடுதலை உணர்வை வெளிப்படுத்தும் மூன்று கவிதைகள் ஆகியவற்றையும் சேர்த்து, திருத்தப்பட்ட மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.