பக்கம்:தான்பிரீன்-தொடரும் பயணம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான்பிரீன் : தொடரும் பயணம்


ஷங்களுக்கு முன்னால் அவர்களைக் கொலைகாரர்கள் என்று கூறிவந்த ஜனங்களே, பின்னால் அவர்களைப் போற்றிப்புகழ நேர்ந்தது!

செப்டம்பர் மாதம் முடிவில் அவன் டப்ளினுக்குச் சென்று தங்கியிருந்த போது, அங்கிருந்த தொண்டர்படைத் தலைவர்கள் அவனுக்கு ஒரு தங்கக்கடிகாரமும், சங்கலியும் பரிசலித்து அவனைப் பாராட்டிப் புகழ்ந்தனர்.

சமாதான உடன்படிக்கை கையெழுத்தாவதற்குச் சில தினங்களுக்கு முன்னால் தான்பிரீன் டப்ளினை விட்டுத் தென்பாகத்திற்குச் சென்றான். தொண்டர்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் போலிச்சமாதானத்தை எதிர்த்து நிற்கும்படி செய்து விட்டால், தலைவர்கள் அவர்களுக்கு விரோதமாக நடக்க மாட்டார்கள் என்று அவன் நம்பியிருந்தான். தொண்டர்களே அரசியல்வாதிகளுக்கு வழிகாட்ட வேண்டியிருந்தது.

தான்பிரீன் டிசம்பர் 7ஆம் தேதி மீண்டும் டப்ளினுக்குச் சென்று லியாம் ஸீன் ஹோகன் முதலிய நண்பர்களைக் கண்டு, சமாதானத்தைத் தொலைத்து, உடனே சண்டையை மறுபடி தொடர்ந்து நடத்துவேண்டுமென்று வற்புறுத்தினாான். குடியரசுப் படையில் பிளவு ஏற்படாமலும், நாட்டுமக்கள் சோம்பலில் ஆழ்ந்து விடாமலும் இருக்க வேண்டுமானால், போர் நடத்துவதே உத்தமம் என்பதை விளக்கினான். பிரிட்டிஷாருடன் எவ்விதமான சமாதானம் செய்யப்பட்டாலும் ஜனங்கள் அதை ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஏனெனில், மக்கள் போராட்டத்தினால் பெரும் நஷ்டங்களடைந்து களைப்புற்றிருந்தனர். ஆதலால் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு, அதன்படி புதிய தேர்தலை நடத்தி, அதன் மூலம் ஜனங்களுடைய அபிப்பிராயத்தை தெரிந்துகொள்வது சரியான முறையன்று என்று அவன் வாதாடினான். தலைவர்கள் யாவரும் அவனுடைய நோக்கத்தை ஆதரிக்க மறுத்துவிட்டனர். பழைய நண்பர்கள் பலரும் அவனை இவ்விஷயத்தில் கைவிட்டனர்.

அவன் தன் முயற்சி தோல்வியுற்றதன்மேல் அயர்லாந்தை விட்டு வெளியேறி, அந்நிய நாடுகளுக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தான். அவனும் ஸீன் ஹோகனும் லண்டனில் இருந்த இந்தியத் தலைவர்களை இது சம்பந்தமாய்க் கலந்து பேசிய பொழுது அவர்கள், 'ஐரிஷ்காரர்களாகிய நீங்கள் உங்கள் நாட்டுப் போராட்டத்தையே முடிக்காலமல் இடையில் நிறுத்திவிட்ட பொழுது, நீங்கள் இந்தியாவுக்கு வந்து என்ன செய்துவிட முடியும்?' என்று கேட்டார்கள். இதனால் தான்பிரீன் இந்தியாவுக்கு வரவேண்டாம் என்று கருதி, அமெரிக்காவுக்குப் புறப்பட ஏற்பாடு செய்தான். இடையில், அவனுடைய உயிர்த்தோழன் ஸீமஸ் ராபின்ஸனுக்கு டப்ளினில் திருமணம் நடந்தது. தான்பிரீன் கூடவே இருந்து அதை நடத்திவைத்தான்.

139