பக்கம்:உத்திராயணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 லா.ச.ராமாமிருதம்


'அத்வானம் பிடித்த '-பல்லவிக்கு ஈதெல்லாம், இன்னும் சொல்ல விட்டுப்போனதெல்லாமே சரணங்கள்தாம்.

“மொட்டை மாடியில் காத்து வாங்கலாம்னா படி கிடையாது. என்ன வீடு கட்டி வாழறோமோ?”

மாடிப்படி கட்டுவதற்குள், பணம் போண்டி. அப்படியும் விடவில்லை. ஏணி வைத்து ஏறுகிறோம்.

“பிராமணன் bar விளையாடற வயசைப் பார்!” ஹரிணிக்கு ஏணியில் ஏறமுடியாத எரிச்சல். என்றுமே அவளுக்கு எல்லாரைக் காட்டிலும் உசிர் வெல்லம். உடம்பு வேறே தடித்துவிட்டது.

ஆனால் அவள் பயங்களை மறுப்பதற்கில்லை. இங்கு இயற்கை, தன் ஆட்சியை பட்டண வாசத்தின் தடங்கலின்றிச் செலுத்துகிறது. வீட்டைச் சுற்றி முள்வேலி. பூமியில் வளைகள். எதிலிருந்து எது வேண்டுமானாலும் இருக்கலாம். என்னைக் கேட்டால்? பூமியென்றிருந்தால், வளைகள், குழிகள், வெடிப்புகள், ஏன் இங்கிருந்து மயிலாப்பூரில் அப்பர்சாமி கோவில் தெரு, பழைய நெ. 20, அடுக்குள் தொட்டி முற்றத்தில் ஜலதாரை வரை சுரங்கமே ஒட வழியுண்டு. நான் என்ன செய்ய?

பாட்டி ஆசையாகப் பேரக் குழந்தைகளுக்கு, வடாம், வற்றல் வறுத்து பொட்டலங் கட்டி அங்கு போட்டால், அந்தப் பக்கம் மேடாயிருந்தால், அந்த மேடு ஒரே சீராய் இந்தப் பக்கம் தாழ இறங்கினால்-எந்த மூஞ்சூரைக் கேட்பேன்? உஷ், வேண்டாம். தமாஷூக்கு அங்கும் லாயக்கில்லை. இங்கும் லாயக்கில்லை! சிரிக்கத் தெரிந்திருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்?

சென்ற மூன்று வருடங்களாக சென்னைக்கும் லண்டன் வெதர் வந்துவிட்டது, திடீர் கோபம் திடீர் அழுகை, திடீர் மூக்கைச் சிந்திப் போடு, உடனே சிரி எல்லாம் நம் மாதிரிதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/20&oldid=1149371" இலிருந்து மீள்விக்கப்பட்டது