பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறுகதைகள் 15


யளவு சோறு பெறத் தவித்து வாழ உயிரை இழக்கும் நிலையைத் "தனியொருவனுக்கு" என்ற சிறு கதையில் உருக்கமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் புதுமைப்பித்தன். கைவல்ய ஞானி ஒருவர், கடவுள் எங்கும் உண்டு என்று கற்பிப்பவர், எவ்வாறு ஒரு நாள் தன் அந்தரங்க சீடன் ஒருவனின் மனைவிமேற் காதலுற்றுக் கலங்கினார் என்பதை ஜீவா "வேதாந்த கேசரி’ என்ற கதையிற் காட்டுகிறார், சோஷலிஸ்டு கருத்தினை மேடையிற் பரப்பும் ஒருவர் எவ்வாறு அதே நேரத்தில் லாட்டரிச் சீட்டுப் போட்டுப் பிறரை ஏமாற்ற அவர் பணத்தைத் தான் நாடி விரும்பி எதிர்பார்க்கிறார் என்பது ஜீவா எழுதிய "பிரதிவாதி பயங்கரம்’ என்னும் மற்றொரு கதையால் வெளியாகிறது. ஜில்லா போர்டு தலைவர் ஒருவர் "மக்களாய்ப் பிறந்தார் எல்லோரும் சமம், உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்பது இந்தியாவில் இல்லையே” என மேடைகளிற் பேசும் இயல்புடையவர், வெள்ளத்தால் வாட்டமுற்றுத் தங்க இடமின்றிக் கலங்கிய நாவிதன் ஒருவனுக்கு வீட்டின் திண்ணைப் புறத்தே இடங்கொடுக்க இசைய மனமில்லாதவராய், அதை வெளிப்படையாகக் காட்டாமல் அவனுக்குக் குடிசை கட்டிக்கொள்ள என ஐம்பது ரூபாய் கொடுத்துத் தப்பித்துக்கொள்கிறார் என்ற செய்தி விந்தன் எழுதிய "பொன்னி" என்ற கதையில் விறுவிறுப்புடன் காட்டப்பட்டுள்ளது. கணையாழி எழுதிய 'நொண்டிக் குருவி'யில் வரும் காலேஜ் மாணவி ஒருத்தி ஜீவகாருண்ய மேடைப் பிரசங்கத்தில் வல்லவன் தன்வீட்டில் சிதைந்த கூட்டில் வருந்திக் கிடக்கும் நொண்டிக்குருவியைத் தள்ளி எறியக் கூசவில்லை என்பது அறியப்படுகிறது.


    "யார் குற்றவாளி” என்ற கருத்தோடு எழுதப்படும் கதைகள் பல. இராசகோபாலச்சாரியார் எழுதிய "பட்டாசு" அண்ணுதுரை எழுதிய 'குற்றவாளி யார்?' புதுமைப் பித்தன் எழுதிய 'பொன்னகரம்' ஜீவா எழுதிய 'கொலு பொம்மை' ஆகிய கதைகளில் வரும் பாத்திரங்கள் திருடியதாகவோ, விபசாரம் செய்ததாகவோ இருந்தன. அதற்குக்