பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ii

கப்பட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தில், ஆங்கில-தமிழ் அகராதித் தலைமைத் தொகுப்பாசிரியராக ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு, மாஸ்கோவில் நடைபெற்ற 25ஆவது உலக மொழிப் பேரறிஞர் மாநாட்டில், தென்னகத்தின் பேராளராக (Delegate) கலந்து கொண்டு, 'உலகினருக்குத் திருவள்ளுவர் தரும் செய்தி' என்ற தலைப்பில் தமிழின் பெருமையினை உலகினுக்கு எடுத்துரைத்தார். இவரின் ஆற்றல்களை அறிந்தே "செந்தமிழ்ச் செல்வர்' என்ற பட்டத்தைத் தருமபுர ஆதீனம் இவருக்கு வழங்கியது.

தமிழில் ஒப்பாய்வுக்கு வழிகோலியவர். தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒத்த புலமையுடையவர். ஆங்கிலத்தில் தமிழைப் பற்றிய பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.

நாதனார் நாநலம் கண்டறியா மேடைகளே தமிழகத்தில் இல்லையெனலாம். தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்து, பின்னர் வடநாடு, ஈழம், மேலை நாடுகள் எங்கும் தேமதுரத் தமிழோசை பரவும் வகை செய்தார். இவரது நாவன்மையை ஞானியாரடிகள், திரு. வி. க., மறைமலையடிகள் போன்றோர் சிறப்புற பாராட்டியுள்ளனர்.

இலக்கிய புலமையும், மொழியியல் வல்லமையும் வாய்ந்த இவர், கவிதைகள் சிலவற்றையும் இயற்றியுள்ளார்.

இறுதிக் காலத்தில் 1965ஆம் ஆண்டு முதல் 1967 வரை மதுரைத் தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். இவ்வாறு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய, உருவத்தாலும் உள்ளத்தாலும் ஒரு தான்மைசால் (Personality) தமிழ்ப்பெருமகன் பெருமித நோக்கு கொண்ட பண்பாடு மிக்கப் பெருந்தகை, 1967ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் நாள் இயற்கை எய்தினார்.