பக்கம்:நான்மணிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 நான்மணிகள்

எளியவர் என்று எவரையும் இகழாதே; தகுதியற்ற வரிடமிருந்து எதையும் வாங்காதே; தவறு கண்டாலும் ஏழை மக்களைச் சீறாதே; தீய சொற்களைப் பதை பதைத்த போதும் கூறாதே. (1)

பறை ஓசையைக் கேட்டால் அசுணமா உயிர் வாழாது; தமது நிலை குலைந்தால் அறிவுடையோர் உயிர் வாழார்; நெல் உண்டாகி விட்டால், மூங்கில் பட்டுப் போய்விடும்; இழிவுரைகளைக் கேட்டால் சான்றோர் உயிர் நீத்து விடுவர். (2)

மாணிக்கங்களின் இயல்பைக் கழுவி அறியவேண்டும்; குதிரைகளின் இயல்பை ஏறி அறிய வேண்டும்; பொன்னின் இயல்பைச் சுட்டு அறிய வேண்டும்; உறவினர் இயல்பைக் கெட்டு அறிய வேண்டும். - (3)

அகில் கள்ளியின் வயிற்றிற் பிறக்கும்; அரிதாரம் மானின் வயிற்றிற் பிறக்கும்; முத்து கடலின் அடியிற் பிறக்கும்; நன்மக்கள் பிறக்குங் குடியை எவரறிவார்? (4)

மலையின் பாறைகளில் மாணிக்கம் பிறக்கும்; காதலியின் சொற்களில் களிப்பு பிறக்கும்; அருள் நிறைந்தால் அறநெறி பிறக்கும்; பொருள் நிறைந்தால் எல்லாம் பிறந்துவிடும். - (5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/8&oldid=1354966" இலிருந்து மீள்விக்கப்பட்டது