பக்கம்:எண்ணக்குவியல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆமை

25


புலப்படுத்தினார். அந்த ஆமை நம் கண்ணுக்குத் தெரியும் ஆமையல்ல; காணமுடியாத ஆமையாகும்: அதன் பெயர் 'பொறாமை' என்பதே.

ஆமை என்றதும் மக்கள் கிணற்றாமையையும், குளத்தாமையையும் நினைக்கிறார்கள். அது தவறு. இது ஆற்றாமையாகும்.

இந்த ஆமை வாழும் ஆறு எந்த ஆறு என்று கேட்பீர்கள்? அது விண்ணாறும் அன்று, வெட்டாறுமன்று: பாலாறுமன்று, பெரியாறுமன்றி; இது வாழும் ஆறு அழுக்காறு ஆகும்.

பிற ஆறுகளின் இரு கரைகளிலும் கோட்டுப்பூ, கொடிப்பூ ஆகிய பல பூக்கள் பூக்கும்; இந்த ஆற்றின் இரு கரைகளிலும் 'எரிப்பு' ஒன்று மட்டுமே பூக்கும்.

ஆற்றாமை என்பதும், அழுக்காறு என்பதும், எரிப்பு என்பதும் பொறாமை என்பதைக் குறிக்கும் சொற்களேயாம்.

இவற்றைக் கொண்டு பார்க்கும் பொழுது, "அமீனா புகுந்த வீடும், பொறாமை புகுந்த வீடும் உருப்படா" என்பதே, பழமொழியின் உண்மைப் பொருளாக இருக்க வேண்டும் என்பது தெரிகிறது. .

ஐயோ, பாவம்! பொறாமை புகுந்த வீடு மட்டுமா? அது புகுந்த தெருவும், சிற்றூரும், நகரமும், நாடுங்கூடக் கேடு அடையும் என்றே தோன்றுகிறது.

எத்தனையோ மன்னர்களின் உள்ளத்தில் இவ்வாமை புகுந்து, அவர்களின் உடலைச் சுட்டுச் சாம்பலாக்கிய அவர்களின் அரண்மனைகளைத் தவிடு பொடியாக்கி, அவர்களின் நாடுகளையும் பாழாக்கி வந்திருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எண்ணக்குவியல்.pdf/26&oldid=1253003" இலிருந்து மீள்விக்கப்பட்டது