பக்கம்:மாணவர்களுக்கு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி. ஆ. பெ. விசுவநாதம்

பெண், வயது 21 இருக்கும், அப்பேருந்தில் ஏறி கூட்டம் அதிகமாக இருந்ததால், கைப்பிடியை பிடித்து நின்று கொண்டு வந்தாள். என் அருகில் உட்கார்ந்திருந்த ஆங்கிலோ இந்தியர் ஒருவர் எழுந்து அப்பெண்ணை உட்காரும்படி கேட்டுக் கொண்டார். அப்பொழுது எனக்கு இந்தப்புத்தி வரவில்லையே என்று வெட்கப்பட்டேன். ஆனால் அப்பெண் உட்காரவில்லை. நின்று கொண்டே வந்தாள். இவர் மறுபடியும் அப்பெண்ணிடம் சென்று உட்காரும்படி கேட்டுக் கொண்டார். உடனே அப்பெண். “யூ'சிடவுன் ப்ளிஸ், தயவு செய்து நீங்களே உட்காருங்கள்” என்று கோபமாகக் கூறினாள். அது மட்டுமல்ல ஐரோப்பியர்கள் வஞ்சகர்கள்? பெண்களை பலவீனர்கள் என்று கருதிக் கேவலப்படுத்துகிறவர்கள். இனிமையாகப் பேசி ஏமாற்றுகிறவர்கள்” என்று வசைபாடத் தொடங்கி விட்டாள். பேருந்தில் இருந்த மற்றொருவர் “அவரை, ஏனம்மா திட்டுகிறீர்கள். அவர் உங்கள் மீது இரக்கங் காட்டித் தானே உட்காரச் சொன்னார்?” என்று கூறினார். அதற்கு அப்பெண், “அவர் இரக்கமா காட்டினார். எனக்கு முன்னால் 75 வயது கிழவர் கைப்பிடியைப் பிடித்து தள்ளாடிக் கொண்டு நிற்கின்றார். அவரிடம் ஏன் அந்த இரக்கத்தைக் காட்டவில்லலை” என்று சத்தம் போட்டாள். அந்த ஆங்கிலோ இந்தியர் எங்கு போக இருந்தாரோ அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி ஓடிப் போய்விட்டார், நான் முன்னே வந்திருந்தால் அந்த இடம் எனக்குச் சொந்தம், அவர் முன்னே வந்ததால் அவருக்குச் சொந்தம், அதுதான் சம உரிமை என்றும் கூறினாள். அப்பொழுது தான் நான் எழுந்து அந்தப் பெண்ணை உட்காரச் சொல்லாதது புத்திசாலித்தனம் என்று எனக்குப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணவர்களுக்கு.pdf/72&oldid=1267716" இலிருந்து மீள்விக்கப்பட்டது