பக்கம்:எனது நண்பர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106  எனது நண்பர்கள்

பக்கத்தில் உள்ள ஒரு விட்டிற்குள் புகுந்து கொண்டார்கள். நான் பேசிக் கொண்டேயிருந்தேன். கற்கள் என் மீதும் பாதுகாப்பிற்காக வந்திருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர்மீதும் சரமாரியாக வந்து விழுந்தன. “இனிப்பேச வேண்டாம், தயவு செய்து நிறுத்திவிடுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டார். அப்போது மேடைமீது இரண்டு வண்டி கருங்கற்கள் வந்து விழுந்தன. என் உதடு கிழிந்து இரத்தம் சொட்டியது. இச் செய்தி கோவில்பட்டியில் உள்ள டிப்டி கலெக்டருக்குத் தெரிந்து, அவர் ஒரு படையோடு வந்து எங்கள் இருவரையும் காப்பாற்றி, கல் எறிந்தவர்களில் முப்பது பேர் மீது குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்திருந்தார். காலப்போக்கில் அவ்வழக்கை அப்போது முதலமைச்சராயிருந்த, C. ராஜகோபாலாச்சாரியார் நடத்தவேண்டாமென்றும், திரும்பப் பெற்றுக் கொள்ளும்படியும் அங்குள்ள அரசாங்க வழக்கறிஞர்களுக்குக் கட்டளையிட்டார்.

இந்த அநீதியைக் கண்டித்து சர்.ஏ.டி. பன்னீர் செல்வம் சட்டசபையில் முதலமைச்சர் சி. ஆரைத் தாக்கிப் பேசி, “இதுதான் காங்கிரஸ்காரருடைய தேசீயச் செயலா?” என்று கேட்டார். அப்போது முதலமைச்சர் சி.ஆர். அவர்கள், மிகவும் பொறுமையாக “பொது மக்கள் முன்பு வாய் திறந்து பேசுகிறவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்” என்று கூறினார். அப்போது சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் எழுந்து. “இந்தச் சட்டசபையிலுள்ள காங்கிரஸ் கட்சியினரில் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் மாதிரிப் பேசுகிறவர்கள் யாராவது உண்டா?” என்று ஆவேசத்தோடு ஒரு அறை கூவல் விடுத்தார். இது அன்றைய சட்டசபை நிகழ்ச்சியில் பதிவாகியிருக்கிறது. இதன்மூலம் சர்.ஏ.டி, பன்னிர்ச்செல்வம் அவர்கள் என் உள்ளத்தில் மட்டுமல்ல. தமிழக மக்கள் அனைவரின் உள்ளத்திலுமே குடி கொண்டுவிட்ட செய்தி நாட்டில் விரைவாகப் பரவியது.