பக்கம்:எனது நண்பர்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  137

அதற்கு அவர்கள் எங்களைக் குளிக்கச் செய்து விருந்தளித்து, எங்கள் இருவர் தோளிலும் கையைப்போட்டு, “நம்முடைய நட்பு நிலைத்திருக்க வேண்டுமானால் நமக்குள் பொருள் ஊடாடக்ககூடாது. மன்னிக்கவும்” என்று கூறித் தன் வண்டியிலேயே ஏற்றி வழியனுப்பி வைத்த காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது. என் நண்பரும் வருந்தவில்லை; பிறர் மனம் புண்படாதவாறு நடந்து கொள்ளும் செயல் அரசரது பெருங் குணங்களுள் ஒன்று.

அவர் இன்றில்லை. அவரது திருமகன், அன்றைய குமாரராஜா இன்றைய செட்டி நாட்டு அரசர் தன் தந்தையின் இருப்பிடத்தில் எல்லாத் துறைகளிலும் பணி புரிந்து அவர் இல்லாத குறையைப் போக்கி வருகிறார். தமிழிசை இயக்கத்திற்காக சென்னையில் தன் தந்தையார் கட்டிய தமிழிசை மன்றம் போன்ற ஒன்றை மதுரை நகரிலும் கட்டி மகிழ்ந்தவர் இன்றைய செட்டிநாட்டு அரசர். இது ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப் பெற்ற பெருங்கோயில் போன்று, ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய ஒரு பெருங்கோயிலையே நமக்கு நினைவூட்டி மகிழ்விக்கிறது.

தமிழ் உள்ளவரை, தமிழ்மக்கள் உள்ளவரை, தமிழகம் உள்ளவரை செட்டிநாட்டு அரசர் ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அவர்களுடைய தொண்டும் புகழும் மறையாது. அவ்வழியிலேயே தொடர்ந்து நின்று இன்றும் பணிபுரிந்து வருகின்றனர் செட்டிநாட்டு அரசர் ராஜாசர். முத்தையா செட்டியார் அவர்கள். தந்தை வழி மகன் பெற்ற பெயரும் புகழைப் பெற்று, பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடன் இருந்து, நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் தமிழிசைக்கும் சமயத்திற்கும் சமூகத்திற்கும் தொண்டுகள் பல செய்து சிறப்பெய்தி வாழவேண்டும் என இறைவனை வணங்கி வாழ்த்துகிறேன். வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழிசை வாழ்க. செட்டி நாட்டு அரசர் குடும்பம்!