பக்கம்:எனது நண்பர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  135

போட்டுக் கொண்டு ஆந்திராவிலிருந்து ஏராளமான வாக்காளர்களைத் தஞ்சையில் கொண்டு வந்து குவித்தார்கள். இதற்காகத் தனி இரயில் வண்டிகளும் பல வந்தன. அக்காலத்தில் தஞ்சை நகர மக்களின் எண்ணிக்கை இப்பொழுது உள்ளதில் சரிபாதிதான். ஆனால் நகரம் முழுதும் ஆந்திரர்களின் எண்ணிக்கையும், அந்நகர மக்களின் எண்ணிக்கையோடு சம அளவில் இருந்து, தஞ்சை நகரமே ஒரு தெலுங்கு நாட்டின் நகரமாகவே காட்சியளித்தது. இத்தனை பேருக்கும் மனம் சலியாமல் பெருஞ்சோறு அளித்து மகிழ்ந்தவர் ராஜா சர் அவர்கள். இக்காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததோடு, பாரதப் போரில் பெருஞ்சோறு அளித்த தமிழ் மன்னன் உதியன் சேரலாதனையும் நினைப்பூட்டியது.

செட்டி நாட்டு அரசர் தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழகத்துக் கோயில்களுக்கும் அளித்த கொடைகள் மிகப் பல. அவை சொல்ல முடியாதவை.

தமிழிசையானது தமிழகத்திலேயே அழிக்கப் பெற்று வரும் கொடுஞ் செயலைக் கண்டு மனம் புழுங்கி வருந்தி அதை மீண்டும் உயிர்ப்பிக்கப்பெரும்பணி புரிந்த மன்னர் செட்டி நாட்டு அரசர். அதற்காக ஒரு இயக்கத்தையே தொடங்கி, அவர் தலைவராக இருந்து, அதற்காக என்னையும் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களையும் கூட்டுச் செயலாளராக வைத்து, எங்களை ஒயவிடாமல் வேலை வாங்கிய பெருமை ராஜா சர் அவர்களைச் சாரும். கும்பகோணத்தில் ஒரு தமிழிசை மகா நாட்டைக் கூட்டி டைகர் வரதாச்சாரியார் அவர்களைத் தலைமை வகிக்கச் செய்து, ஒரு பெரும் புரட்சியைச் செய்தார். அன்று நான் பேசிய பேச்சை பல லட்சக்கணக்கில் அச்சிட்டு ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ஆட்களை வைத்து மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தவர் ராஜா சர் அவர்கள். அன்றையப் பேச்சைக் கல்கி மிகவும் பாராட்டி எழுதி, தன் இதழில் வெளியிட்டிருந்ததும் என் நினைவில் இருக்கிறது.