பக்கம்:எனது நண்பர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  117

மக்களின் வாழ்வுக்காகத் தன் வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்டவர் எனக் கூறலாம். இதற்காக நண்பர் அண்ணாத்துரை அவர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி கூறவேண்டும். அதைவிட அதிகமாக அவரை வளர்த்து, ஊக்குவித்து, நாட்டின் பொதுவாழ்வுக்கு தந்துதவிய அவருடைய “தொத்தாவுக்கு” (சிறிய தாயார்) நன்றியும், வணக்கமும் செலுத்தத் தமிழ் மக்கள் என்றும் கடமைப்பட்டவர்களாவர்.

இந்தி எதிர்ப்பு

1938–இல் நமது மாகாணத்தில் இந்தி எதிர்ப்புப் போர் நடைபெற்றது. அதை நடத்தியவர்களின் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே எனக் கூறலாம். அப் பேரை நடத்துவதற்கென்றே திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டின் பொருட்டாகப் பெரும் பொறுப்புக்கள் சிலவற்றை நான் ஏற்றேன். பெரியார் சிறை சென்றதும், முழுப்பொறுப்பும் என்மீதே விழுந்தது. அப்பொழுதெல்லாம் அன்பர் அண்ணாத்துரை அவர்களைப் போன்ற பலருடைய ஒத்துழைப்பும், தொண்டும் இல்லாதிருக்குமானால், என்னால் ஒன்றும் செய்ய முடிந்திராது. இந்தியை எதிர்த்தும், அரசாங்கத்தின் கொள்கையைத் தாக்கியும் பேசிய குற்றத்திற்காக அவர் ஆறுமாதம் சிறைத்தண்டனையைப் பெற்றார். அப்போதுதான் தமிழ்நாட்டு மக்களிற் பலருக்கு அவரை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

அறிமுகம்

தமிழ்நாட்டு மக்களுக்கு அன்பர் அண்ணாத்துரையை அறிமுகப்படுத்தி வைத்தது யார்? என்று யாரோ கேட்டதாகத் தெரிகிறது. அவருக்குப் பதில் கூறுவதாயிருந்தால் “கேள்வியே தவறு” என்றுதான் பதில் கூறவேண்டும். கேள்வி, “அறிமுகப்படுத்திவைத்தது எது?” என்று இருக்கவேண்டும். அவ்விதம் இருக்குமானால், அது “அவரது தாய்மொழிப் பற்றும்,சீர்திருத்த உணர்ச்சி கலந்த பேச்சும்” என்று பதில் கூறலாம்.