பக்கம்:கடற்கரையினிலே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார்

99


உள்ளத்தில் ! 'உன் மணற் பரப்பிலே நன்னீர் கரந்து, அல்லி மலர் பூத்து நின்ற கேணிதான் அக்கவிஞர் பெருமான் கருத்தைக் கவர்ந்ததோ?' 'தொட்டனைத் தூறும் மணற்கேணி" என்ற அருமைத் திருக்குறள் உன் அருகேயுள்ள திருவல்லிக்கேணியைத்தான் குறித்ததோ? இளங்காற்றளித்துச் சிறு நன்மை செய்த உனக்கு எத்துணை அருமையான கைம்மாறு அளித்துவிட்டார் அப்பெருமான் ! உன் அல்லி மணற்கேணிக்கு அழியாப் பெரும் பதம் அளித்துவிட்டாரே! அவர் வாழ்த்துரையால்தான் திருவல்லிக்கேணிக்கு வாழ்வின் மேல் வாழ்வு வருகின்றதோ?

"நீலத் திரைக்கடலே ! உன்னைக் கடைக்கணித்த அப்பெருந்தகையை ஏழையேன் என் சொல்லி ஏத்துவேன்? மாநில மெங்கும் புகழ் பெற்று விளங்கும் அப்பெருமானைத் தமிழகம் செய்த தவக்கொழுந்து என்பேனோ? நானிலம் செய்த நற்றவத்தின் பயன் என்பேனோ? ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்பேனோ? செந்தமிழ்ச் செம்மணிகளாய் இலங்கும் மும்மணிகளுள் அவரே நடுநாயகமாகக் காட்சி தருகின்றார். புனிதமான அக்காட்சியை என் புன்கவியால் எழுதிக்காட்ட முடியுமா? ஆயினும் கடுக்கின்றது ஆசை; கதிக்கின்றது கவிதை.

"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்வித மாயின சாத்திரத் தின்மனம்
பார்எங்கும் வீசும் தமிழ்நாடு