பக்கம்:ஓ மனிதா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குரங்கு கேட்கிறது

29

இதனால் என்ன நடக்கிறது? — எங்களுக்குவேண்டியதை நாங்கள் உங்களிடமிருந்து தட்டிப் பறித்தே தின்ன வேண்டியிருக்கிறது.

நாங்கள் மட்டும் என்ன, நீங்களும் ஒருவரை ஒருவர் நாசூக்காக, நாகரிகமாகத் தட்டிப் பறித்தே தின்று கொண்டிருக்கிறீர்கள்!

இது உங்கள் பிறவிக் குணம்; நீங்களாக யாருக்கும் எதுவும் கொடுக்க மாட்டீர்கள். அப்படியே கொடுத்தாலும் ஏதாவது ஒரு லாப நோக்கோடுதான் கொடுப்பீர்கள். நல்ல வேளையாகக் கடவுள் உங்கள் கண்ணில் படுவதில்லை. பட்டால் அவருக்கு எதிர்த்தாற்போலேயே யாராவது ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு காசை எடுத்துத் தாராளமாகத் தருமம் செய்து விட்டு, ‘நான் தான் தருமம் செய்து விட்டேனே, எங்கே எனக்கு மோட்ச சாம்ராஜ்யம்? கொண்டா!’ என்று கூசாமல் கேட்டாலும் கேட்பீர்கள்!

‘இருப்பவன் எதையும் எதிர்பாராமல் இல்லாதவனுக்குக் கொடுப்பது’ என்ற ஒரு தருமத்தை மட்டுமாவது நீங்கள் அன்றிருந்தே கடைப்பிடித்து வந்திருந்தால், இன்று உங்களிடையே திருடர்களும் கொலைகாரர்களும் ஏன் உருவாகியிருக்கப் போகிறார்கள்?

அல்லது, ‘இந்த உலகத்தில் காணும் எல்லாமே எல்லாருக்கும் சொந்தமானவை. இவற்றில் உனக்கு, எனக்கு என்று எதுவும் இல்லை’ என்ற வேதாந்தத்தை எங்களைப் போலவே நீங்களும் உண்மையாகவே கடைப்பிடித்து வந்திருந்தாலும் உங்களிடையே ‘இருப்பவன்’ என்றும், ‘இல்லாதவன்’ என்றும், இப்போது எவனும் இருந்திருக்க மாட்டானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/30&oldid=1370725" இலிருந்து மீள்விக்கப்பட்டது