பக்கம்:ஓ மனிதா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

ஒ, மனிதா!

பிடித்துத் தயார்செய்து ஒன்றுடன் ஒன்றை மோத விட்டீர்கள். அவை மண்டை உடையச் சண்டையிடுவதைச் சந்தோஷமாக, படு சந்தோஷமாகப் பார்த்துக் களித்தீர்கள்!

இந்த வேடிக்கையெல்லாம் வேடிக்கையாகவே நின்றிருக்கக் கூடாதா?—அதுதான் இல்லை; சண்டையில் சூடு பிடிக்கவேண்டும் என்பதற்காக ஒரு கட்சி, மறு கட்சி என்று இரண்டு கட்சிகளைத் துவக்கி வைத்தீர்கள். கட்சி இரண்டு பட்டதும் போட்டியும் பொறாமையும் தாமாகவே உண்டாயின. அதற்கு மேல் ‘பந்தயம்’ என்று ஒன்று ஏற்பட்டு, உங்கள் ஆசையை பேராசையாக வளர்க்கும் புண்ணியத்தை ஏற்றது.

முடிவு?—காடையும் கவுதாரியும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே, சேவலும் ஆடும் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போதே நீங்கள் வாயோடு வாய் கலந்து, கையோடு கை கலந்து சண்டையிட ஆரம்பித்து விட்டீர்கள். காடைக்கும் கவுதாரிக்கும் மட்டும் அல்ல, சேவலுக்கும் ஆட்டுக்கும் கூட ஒரே ஆச்சரியம்!—அவை தங்கள் சண்டையை மறந்து உங்கள் சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டன!

இதுவே நீங்கள் வேடிக்கைக்காகக் கண்ட சண்டை வினையான வரலாறு.

மனிதா! இப்படி நீ வளர்த்த சண்டை, இப்படி நீ வளர்த்துக்கொண்ட சண்டை இப்போது எப்படி இருக்கிறது? உங்களில் ஒரு சிலரை மட்டும் அல்ல, எல்லாரையுமே பைத்தியக்காரர்களாக்கி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/83&oldid=1370955" இலிருந்து மீள்விக்கப்பட்டது