பக்கம்:ஓ மனிதா.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நரி கேட்கிறது

91

‘பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ என்பார்கள். எனக்கும் திராட்சைப் பழத்துக்கும் என்ன சம்பந்தம்? கழுதைக்கும் கற்பூரத்திற்கும் என்ன சம்பந்தம் உண்டோ, அந்த சம்பந்தம்தான் எனக்கும் திராட்சைப் பழத்துக்கும் இருக்க முடியும். அப்படி இருக்க நான் ஏன் திராட்சைப் பழத்தைப் பறிக்க எட்டி எட்டிப் பார்க்கப் போகிறேன்? எட்டவில்லை என்று தெரிந்ததும், ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று நான் ஏன் விரக்தியுடன் சொல்லப் போகிறேன்!

இனிப்பாயிருந்தாலுந்தான் அந்தப் பழம் எனக்கு பிடிக்காது. இதுகூடத் தெரியவில்லையே உங்களுக்கு?

ஓ, மனிதா! உண்மையைச் சொல்லப் போனால் ஊரை ஏய்த்துப் பிழைப்பதில் உனக்கு நானும் குறைந்தவன் அல்ல. எனக்கு நீயும் குறைந்தவனல்ல. அந்த விஷயத்தில் நாம் இருவரும் ஒன்றே.

வாயில் இருக்கும் வடைக்காக நான் காகத்தைப் புகழ்ந்தால் நீ வேறு எதற்காவது வேறு யாரையாவது புகழ்கிறாய்!

சிங்கத்துக்கு இரையாகாமல் தப்புவதற்காக நான் அதைப் பாழுங் கிணற்றில் தள்ளிக் கொன்றால் நீ வேறு யாரிடமாவது தப்புவதற்காக வேறுயாரையாவது எதிலாவது தள்ளிக் கொல்கிறாய்!

இதுவே உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்!

ஆக ‘ஏமாறுபவன்’ என்று ஒருவன் இருக்கும் வரை ‘ஏமாற்றுபவன்’ என்று ஒருவனும், ‘ஏமாற்றுபவன்’ என்று ஒருவன் இருக்கும்வரை ஏமாறுபவன் என்று ஒருவனும் இந்த உலகத்தில் இருந்து கொண்டிருக்கத்தான் போகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/92&oldid=1371034" இலிருந்து மீள்விக்கப்பட்டது