பக்கம்:மார்ட்டின் லூதர் கிங்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மார்ட்டின் லூதர்


வருங்கால சந்ததிகளாகிலும் இந்தப் பாவிகள் முகத்தில் விழிக்காதிருப்பார்களாக! நமது வாழ்நாளோடு ரோமாபுரியின் பேராசை ஒழியட்டும்! கத்தோலிக்க மார்க்கத்தை சமர்களத்தில் சந்திக்கின்றேன். ஜர்மன் நாடு முழுதுமே இதைச் செய்யத் துணிந்தால் அரசன் ஆளப்போவது யாரை? வெறும் கல்லையும் மண்னையுமா? ஓரிருவரையடக்கலாம், ஓராயிரவரைச் சிறையிடலாம். யார் யார் நம்மை யடக்க அரசாங்கச் செலவில் பணிக்கப்பட்டிருக்கிருர்களோ, அவர்களே இதைச் செய்யத் துணிந்தால் அரசருக்கு ஆளேது ? பிறகு சமாதானத் தூது விடுவான். சமரசம் பேச வருவான். இது, வழி வழி வந்த அரசர்கள் கையாண்ட முறை. ஆகவே அஞ்சவேண்டாம் என மேலும் நடந்தான்.

வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டனர். ஆரவாரிக்கவில்லை. கைதட்டல் கிடையாது. சவத்தின் பின்னால் சென்று, சுடலையில் பிணம் புதைக்கப்பட்ட பின் மெளனமாகத் திரும்பும் மக்கள்போல பார்லிமெண்டு கட்டடம் வரையிலும் பின் தொடர்ந்து சென்ற மக்கள் இவன் உள்ளே நுழைந்ததும், இவர்களும் மெளனமாக வெளியே நின்றுவிட்டனர். மக்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. மக்களுக்கும் உள்ளே செல்ல ஆசையும் கிடையாது. தவறிச் செல்பவர்களை வெளியே விரட்ட பட்டாளங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சிக்கிடையே 1521 ஏப்ரல் 17-ந் தேதி டப் (Dub) என்ற பார்லிமெண்ட் சபையினுள்ளே நுழைந்துவிட்டான் லூதர்,