பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

அகராதி ஆசிரியர்


பங்கு சேர்த்துப் பணம் திரட்டலாமா என்று கருதினார். பங்கு ஒன்றுக்கு இருநூறு ரூபாயாக எழுபது பங்கு சேர்க்க முயன்றார். ஆயினும் அவர் கருதியவாறு பங்குகள் விலைப்படவில்லை. அந் நிலையில் வேறு வழியின்றித் தம் சொந்தப் பொறுப்பில் ஐயாயிரம் ரூபாய் கடன்பட்டு, அச்சு வேலையை முடித்து அகராதியை வெளிப்படுத்தினார்[1]. ”கடன் கொண்டும் செய்வன செய்தல் நன்று” என்ற உண்மையை மனத்திற்கொண்டு, தொண்டு செய்த வின்சுலோ ஐயர் போன்ற பெரியார் என்றும் தமிழ் நாட்டாரது நன்றிக்கு உரியராவர் அன்றோ ?

இவ்வாறு வளர்ந்து வந்த தமிழகராதியில் பின்னும் பல சொற்கள் பல திசைகளினின்றும் வந்து சேர்ந்தன, தமிழ் நூல்களில் இடம் பெறாத பல்லாயிரம் சொற்கள் பேச்சுத் தமிழிலே வழங்கி வந்தன. மகமதியரது ஆட்சிக் காலத்தில் வந்த அரேபியச் சொற்களும் பாரசீகச் சொற்களும் பலவாகும். இன்று நீதிமன்றம், நிலவரி மன்றம் முதலிய அரசியல் நிலையங்களில் வழங்கும் சொற்கள் இதற்குச் சான்று பகரும். வக்கீல் என்பது அரேபியச் சொல். குமாஸ்தா என்பது பாரசீகச் சொல். அயன் என்பதும், இனாம் என்பதும் அரேபியப்பதங்கள். அரசியல் துறையில் சர்க்கார், தர்பார் முதலிய சொற்கள் பாரசீகம். ஜில்லா, கஸ்பா முதலியன அரேபியம். இன்னும் ஐரோப்பியர் வர்த்தக முறையிலும், துரைத்தன வகையிலும் இந்நாட்டிற் கலந்த பொழுது அவர்


  1. கி. பி. 1882ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.