பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண பிள்ளை

61


கொண்டு அதன் செம்மையை அடிக்கடி எடுத்துரைப்பாராயினர். அந்நிலையில் கிருஷ்ண பிள்ளை கிருஸ்தவ நூல்களைக் கற்கத் தொடங்கினார். மன்னுயிர்க்காகத் தன்னுயிரை வழங்கிய கிருஸ்து நாதரின் தியாகம் அவர் மனத்தை ஈர்த்தது. விரைவில் மனம் திரும்பி, முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள மயிலைத் தேவாலயத்தில் அவர் ஞானஸ்நானம் பெற்றுக் கிருஸ்து மார்க்கத்தில் சேர்ந்தார். கிருஸ்து நாதரை அருட்பெருங் கடலாகவும், அஞ்ஞானத்தை அகற்றும் மெய்ஞ்ஞானக் கதிரவனாகவும், அடியவர்க்காக அருந்துயருற்று ஆவி துறந்த கருணை வள்ளலாகவும் கருதி வழிபட்டார் கிருஷ்ண பிள்ளை.

கிருஸ்து மதச் சார்பாகவுள்ள சிறந்த நூல்களை அவர் ஆர்வத்தோடு கற்றார், ஆங்கிலத்தில், ஜான் பனியன் என்பவர் இயற்றிய பாவனாசரிதம் [1]'மோட்சப் பிரயாணம்' என்னும் பெயரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. அந்நூலின் நயந் தெரிந்த கிருஷ்ண பிள்ளை. அதைத் தழுவித் தமிழில் ஒரு காவியம் இயற்ற ஆசைப்பட்டார். அவ்வாசையின் பயனே இரக்ஷணிய யாத்திரிகம் என்னும் காவியம்.

பாவத்திற் படிந்த உயிர் கவலையுற்று வாடி, ஆன்ம ரக்ஷகராகிய கிருஸ்து நாதரது அருளால் நித்தியஜீவனைப் பெற்றுப் பேரானந்தம் அடையும் தன்மையை விரித்துரைக்கும் காவியமே இரக்ஷணிய யாத்திரிகம். எனவே, கிருஸ்து நாதரே அக்காவியத்தில் போற்றப்படும் தலைவர்.


  1. The Pilgrim's Progress by John Bunyan.