பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதநாயக சாஸ்திரியார்

67


பன்னிரண்டாம் வயதில் வேதநாயகம் பண்பு நெறியிலே தலைப்பட்டார். அவரை அந் நெறியில் உய்த்த பெருமை சுவார்த்தர் என்னும் கிருஸ்தவ சீலருக்கே உரியதாகும். தஞ்சைமா நகரில் அரசரும் அறிஞரும் போற்ற அருந்தொண்டு செய்தவர் சுவார்த்தர். அவர் ஒரு தேவ காரியத்தை முன்னிட்டுத் திருநெல்வேலிக்கு அருகேயுள்ள பாளையங் கோட்டைக்கு வந்து சேர்ந்தார். தேவசகாயம் தம் மைந்தனை அழைத்துக்கொண்டு அப் பெரியாரைக் காணச் சென்றார். இளங் கொழுந்தென விளங்கிய வேதநாயகம் சுவார்த்தரது கருத்தைக் கவர்ந்தார். இங்ஙனம் அப்பெரியாரது அருளைப் பெற்ற காலமே வேதநாயகரது வாழ்க்கையின் அடிப்படை கோலிய காலம்.

"விளையும் பயிர் முளையிலே தெரியும்“ என்னும் முதுமொழிக்கிணங்க வேத நாயகத்தின் எதிர்காலச் சிறப்பை யெல்லாம் அவரது இளமைக் கோலத்திலே கண்ட சுவார்த்தர் தம்மோடு அவரைத் தஞ்சைக்குக் கொண்டு செல்ல விரும்பினார் ; தந்தையின் அனுமதி பெற்றுத் தம்முடன் அழைத்துச் சென்றார். அன்று முதல் வேதநாயகத்துக்குத் தாயும் தந்தையும், தகை சான்ற சற்குருவும் அவரேயாயினர்.

தஞ்சையில் அரசாண்ட துளசி மன்னனின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் சுவார்த்தர். திருநெல்வேலியிலிருந்து அவர் திரும்பி வந்த போது இறக்கும் தருவாயில் இருந்த அம்மன்னன் மனக்கவலை நீத்துச் சாந்தியடைந்தான் ; பத்து வயதுப் பாலனாகிய இளவரசனை அவர் கையில்