பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கிருஷ்ண பிள்ளை


புரிந்தார்.[1] அச்சங்கங்களின் ஆதரவில் பல ஊர்களில் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட்டன.

சாயர்புரம் என்ற சிற்றூரில் போப்பையர் ஒரு கல்லூரி அமைத்துக் கண்ணும் கருத்துமாய்க் காத்துவந்தார். அவர் ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றபோது அக்கல்லூரிக்குத் தமிழ்ப் புலமைவாய்ந்த நல்லாசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கால்டுவெல் ஐயரைச் சார்ந்தது. அப்பதவிக்கு விண்ணப்பம் செய்த மூவருள் ஒருவர் கிருஷ்ண பிள்ளை. அவருக்கு அப்பொழுது வயது இருபத்தைந்து.

தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் போதிய அறிவு பெற்றிருந்தார் கிருஷ்ண பிள்ளை ; அந்நாளில் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருப்பாற்கடல் நாதன் கவிராயரிடம் நன்னூலை முறையாகப் பாடங் கேட்டிருந்தார்; சமய நூல்களைக் குலவித்தையாக அறிந்திருந்தார். இத்தகைய தகுதி வாய்ந்தவரைக் கால்டுவெல் ஐயர் தெரிந்தெடுத்துச் சாயர்புரக் கல்லூரியில் தமிழாசிரியராக நியமித்தார்.

சாயர்புரத்தில் வேலை யேற்றுத் தமிழ்ப் பணி செய்து வரும் பொழுது கிருஷ்ண பிள்ளையின் வைணவப் பற்று மெல்லத் தளர்வுற்றது. கிருஸ்து மத போதகர்கள் காட்டிய அன்பென்னும் பாசம் அவர் உள்ளத்தை இழுத்தது. அன்றியும் அவர் உற்றார் உறவினர் சிலர், கிருஸ்துமதத்தை ஏற்றுக்


  1. Bishop Sargent of the Church Mission Society (C. M. S.). Bishop Caldwell of the Society for the Propagation of the Gospel (S. P. G.)