பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதநாயகம் பிள்ளை

51


பாராட்டுகின்றார் ; பஞ்சமா பாதகங்களைக் கடிந்துரைக்கின்றார் ; பரிதானம் பெறுவோரையும், பற்றுள்ளம் உடையோரையும் பரிகசிக்கின்றார். நல்லரசின் நீர்மையையும் வல்லரசின் தன்மையையும் அவர் நீதிநூலில் விளக்கிக் காட்டும் பான்மை நன்கு அறியத் தக்கதாகும். நன்னெறி வழுவாத மன்னர்க்கு நாடெல்லாம் அரண்மனை ; மன்னுயிர் எல்லாம் அவர் நற்படை : அன்னார் மனமெல்லாம் அவர் வீற்றிருக்கும் அரியாசனம். ஆனால் கொடுங்கோல் மன்னர்க்குக் குடிகளே பகைவர் ; அவர் அடி வைக்கும் இடமெல்லாம் படுகுழி ; மாளிகையே மயானம் என்னும் பொருள்பட வேதநாயகர் பாடியுள்ளார்.

சீர்காழியில் வாழ்ந்த காலத்தில் வேதநாயகர் இசைப் பாட்டிலே விருப்பம் உற்றார். தென்னாட்டு இசைத் தமிழின் வரலாற்றில் சிறந்ததோர் இடம் பெற்று விளங்குவது சீர்காழிப் பதியாகும். "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தர்“ பிறந்த ஊர் சீர்காழியே. கம்பர் அருளிய இராமாயணத்தை அழகிய கீர்த்தனங்களாகப் பாடி அழியாப் புகழ்பெற்ற அருணசலக் கவிராயர் வாழ்ந்ததும் அப்பதியே. தில்லை மன்றத்தில் திருநடம் புரியும் இறைவனத் தெள்ளிய தமிழ்ப் பாட்டாற் போற்றிய முத்துத் தாண்டவரை ஈன்றதும் அவ்வூரே. இத்தகைய சீர்காழியின் மருங்கே யமைந்த ஊர்களும் இசை மணம் வாய்ந்தனவாகும். "பண்ணோடு இசை பாடும் அடியார்க்கு இம்மை யின்பமும் மறுமை இன்பமும் தரும் மணிகண்டன் மருவும் இடம்“