பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

போப்பையர்

யாகப் போற்றினார்; தளர்வுற்ற பொழுதெல்லாம் அம்மொழியை நினைத்து ஊக்கமும் உறுதியும் பெற்றார் ; தமது எண்பதாவது பிறந்த நாளன்று திருவாசகத்தை அச்சிட்டு வெளிப்படுத்தினார். அப் பெரும்பணியை நிறைவேற்றிய போது இவர் மனம் சிறந்த இன்பம் அடைந்தது. தோன்றாத் துணையாக நின்று உதவிய இறைவன் கருணையை ஐயர் வாயார வாழ்த்தினார்; நேர் முகமாக நின்று ஆசியுரை கூறி ஊக்கப்படுத்திய பாலியல் கலா சாலைப் பெரியார் அம் மகிழ்ச்சியிற் கலந்து கொள்ளாது மாண்டுபோயினரே என்று மனம்வருந்தினர்.

போப்பையர் வெளியிட்ட திருவாசகத்தை அறிஞர் உலகம் ஏற்றுப் போற்றுவதாயிற்று. பாரிஸ் நகரத்தின் தேசியக் கலாசாலையில் பேராசிரியராக விளங்கிய சூலியன் வின்சன் என்பவர் ஒரு தமிழ்ப் பாட்டு இயற்றிப் போப்பையரைப் புகழ்ந்தார். "இரு வினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை யெல்லாம், வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்" என்பது வின்சன் வாக்கு. தமிழ் நாட்டுப் புலவர்கள் ஐயர் திருவாசகத்தைப் பாட்டாலும் உரையாலும் பாராட்டினர்கள்."[1]


  1. தெய்வத் தமிழ்மறைச் செய்யமெய்ப் பொருளைச்
    செந்தமிழ் பயிலா மைந்தர் நன்குணரத்
    தீங்கில தாகிய ஆங்கில மொழியில்
    பெயர்த்தினி தளித்துப் பேரிசை நிறுவினன் அன்னபேர் அறிஞன் யாரெனிற் கூறுதும்
    ஆங்கில நாட்டுக்கு அணியென உதித்து
    அருந்தமிழ் அணங்கைத் திருந்திய செவிலித் தாயென வளர்க்கும் நேயமிக் குடையோன்
    கிருஸ்தவ சமயக் குருத்துவ சீலன்
    போப்பெனும் நாமம் புனைந்த நாவலனே“

    என்று பாடினர். சரவணப்பிள்ளை என்ற புலவர்.