பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

வீரமாமுனிவர்


தெள்ளிய நயமும், சிந்தாமணியின் செழுஞ்சுவையும், கம்ப ராமாயணத்தின் கவியின்பமும் அவர் மனத்தைக் கவர்ந்தன. சிந்தாமணியைப் போல் கிருஸ்து மதச் சார்பாக ஒரு பெருங்காவியம் செய்ய அவர் ஆசைப்பட்டார். அவ்வாசையின் கனியே [1]தேம்பாவணி என்னும் அருங்காவியம்.

யேசுநாதரைக் கைத்தாதை சூசையப்பர் சரித்திரம் தேம்பாவணியில் விரித்துரைக்கப் படுகின்றது. சிந்தாமணிையைப் பின்பற்றி எழுந்த அக்காவியத்தில் திருக்குறளின் மணம் கமழ்கின்றது; கம்பரது கவிநலம் திகழ்கின்றது: கதைப் போக்கிலும் பலவிடங்களில் தேம்பாவணி கம்பரது காவியத்தைத் தழுவிச் செல்கின்றது. இதற்கு ஒரு சான்று காண்போம்.

மிதிலைமா நகரில் இராமன் வில்லை வளைத்துச் சீதையை மணம் புரிந்த செய்தியை மிக நயமாக எழுதியுள்ளார் கம்பர். மன்னன் மாளிகையில் மலைபோற் கிடந்தது மண வில். அதனை எடுத்து வளைப்பதற்காக இராமன் சென்றான். இமை கொட்டாமல் எல்லோரும் பார்த்து நின்றார். அவ்வில்லை எளிதில் கையால் எடுத்தான் இராமன். அவ்வளவுதான் தெரிந்தது. அப்பால் அது ஒடிந்து விழுந்த ஓசை இடிமுழக்கம் போல் கேட்டது. வில்லை எடுத்ததற்கும் ஒடித்ததற்கும் இடையே இராமன் என்ன செய்தான் என்பதை


  1. தேம்பாவணி என்னும் சொல்லுக்கு வாடாத மாலை என்பது பொருள்.