பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

போப்பையர்

பதற்கு ஒரு கல்லூரி அமைத்தார்; சிறந்த ஆசிரியர்களைப் பாடம் சொல்ல நியமித்தார். எல்லாக் கலைகளும் அங்கே போதிக்கப்பட்டன. பள்ளிப் பிள்ளைகள் தினந்தோறும் படிக்க வேண்டிய பாடம்: தமிழ், லத்தீன், கிரீக்கு, ஈபுரு ; அதற்கு மேல் கணிதம், தர்க்கம், தத்துவம் இவற்றைப் போதிப்பதற்குப் பகற் பொழுது போதாமையால் இரவிலும் நெடுநேரம் பாடம் நடைபெற்றது. சாயர்புரக் கல்லூரி ஒரு சர்வகலாசாலையாக விளங்குதல் வேண்டும் என்பது போப்பையரின் ஆசை. தம் இளங் குழந்தைகள் இனிது வளர வேண்டும் என்ற ஆசையால் அளவுக்கு அதிகமாக உணவையூட்டி வயிற்று நோயை வரவழைக்கும் தாயாரைப்போல் பள்ளிப் பிள்ளைகளின் அறிவை வளர்க்கக் கருதிய போப்பையர் பளுவான பாடங்களைச் சுமத்தி மலைப்பையும் திகைப்பையும் உண்டாக்கினர். மாணவர்கள் ஒருவர் பின்னே ஒருவராய் நழுவத் தொடங்கினர். ஐயரும் ஊக்கம் இழந்து, உடல் நலம் குன்றி ஆங்கில நாட்டுக்கு இளைப்பாறச் சென்றார்.

இரண்டு ஆண்டுகள் இளைப்பாறி மீண்டும் இவர் தமிழ் நாட்டுக்குப் பணி செய்ய வந்தார். தஞ்சாவூரிலும், நீலகிரியிலுள்ள உதகமண்டலத்திலும், மைசூர் தேசத்தில் உள்ள பங்களுரிலும் பல்லாண்டுகளாகச் சிறந்த தொண்டு புரிந்தார். நீலகிரியிலுள்ள ஊட்டியில் போப்பையர் பத்தாண்டு பாடசாலை யொன்று நடத்தினார். அப்பொழுது அம்மலையில் வாழும் தோடர் என்ற இனத்தாரோடு இவர் நெருங்கிப் பழக நேர்ந்தது.