பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருஷ்ண பிள்ளை

63


ஆபத்தை விளைவிப்பவன். அக்கொடியவன் இறைவன் படைத்த மாநிலப் பரப்பையும், ஆற்றின் அழகையும், சோலையின் செழுமையையும், கடலின் விரிவையும் கண்டு பொறாமை கொண்டான் ; பூஞ்சோலை வாசிகளை வஞ்சித்து ஆண்டவன் படைத்த உலகத்தைத் தன்வசப்படுத்தக் கருதினான் ; பாம்பின் உருவம் கொண்டு சோலையிற் புகுந்து பசப்பு மொழி பேசி இருவரையும் தன் வசப்படுத்தினான். அந்நச்சு மொழியை நம்பி இருவரும் இறைவன் இட்ட ஆணையை மீறினர் ; மீளாத் துயரத்திற்கு ஆளாயினர். பாவத்தின் பயனாகப் பயங்கர மரணம் வந்துற்றது. சீரெல்லாம் சிதைந்தது. சிறுமை வந்துற்றது. "தற்பதம் இழந்த மாந்தர் தலையிழி சிகையே யன்றோ“ என்று சீரழிந்து சிறுமையுற்ற ஆதி மாந்தரை நினைந்து இரங்கிக் கூறுகின்றார் இரக்ஷணியக் கவிஞர்.

இவ்வாறு உலகத்திற் பல்கி யெழுந்த பாவத்திற்குரிய தண்டனையைத் தாம் அடைந்து, மாந்தர் குலத்தை ஈடேற்றத் திருவுளம் கொண்டார் தேவகுமாரன் ; மனித வடிவம் கொண்டு மண்ணுலகில் பிறந்தார்; சொல்லாலும் செயலாலும் எல்லார்க்கும் நன்னெறி காட்டினார்.

மன்னுயிர் பால் வைத்த அன்பினால் மரச்சிலுவை யேறினார். கிருஸ்து நாதர். அவர் சிலுவையில் ஏறவே, விண்ணுலகில் உவகை ஏறிற்று; பேயுலகில் திகில் ஏறிற்று; ஆன்றோர் : அருள் வாக்கு நிறைவேறிற்று. அன்று முதல் சிலுவை மாபெருந் தியாகத்தின் சின்னமாயிற்று. பரலோகம்