பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முடிவுரை

கிருஸ்தவத் தொண்டர்களால் தமிழ்மொழி அடைந்த மேம்பாடு இதுவரை சொல்லியவற்றால் ஒருவாறு விளங்கும். பொதுமறையென்று தமிழ் நாட்டார் போற்றும் திருக்குறளின் செம்மையை உலகறியக் காட்டிய பெருமை அன்னவர்க்கே உரியதாகும். திருக்குறளின் ஆசிரியராகிய திருவள்ளுவரை மெய்ஞ்ஞான ஒளியாகக் கண்டார் வீரமாமுனிவர். "ஞானத் திருவிளக்கு எறிப்பத் தெளிந்து உணர்ந்து, எங்கும் ஒரு விளக்கென நின்று உயர்ந்த திருவள்ளுவர்“ என்பது வீரமாமுனிவர் வாய்மொழி[1] வள்ளுவர் வழங்கிய திருக்குறள் உலகத்தார்க்கெல்லாம் ஒரு பொதுவுடைமை என்று கருதினார் முனிவர் ; கீழ் நாட்டில் எழுந்த ஞானக் கதிரொளி மேலை நாட்டிலும் வீசுதல் வேண்டும் என்று ஆசைப்பட்டார் ; அவ்வாசையால் திருக்குறளின் இருபாலை லத்தீன் மொழியின் வாயிலாக அறிவுலகத்திற்கு ஊட்டினார்.

அதன் நலமறிந்த கிரால் என்னும் நல்லறிஞர் திருக்குறளின் முப்பாலையும் ஜெர்மானியத்தில் மொழி பெயர்த்தார். ஆங்கிலத்தில் எல்லீசரும், துருவரும் சில பாகங்களை மொழி பெயர்த்தனர்[2].


  1. தொன்னூல் விளக்கம், ப. 1.02.
  2. The edition jointly brought out by Drew and the great Ramanuja Kavirayar is an excellent one. But - it goes' only up to:63 chapters out of a total of 133.
    -Preface to V.V. S. Iyer's Tirukkural.