பக்கம்:புது வெளிச்சம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுவர்க்கம், நரகம் எனும் இவ்விரண்டு சொற்களும் எந்தக் காலத்தில் எவ்வாறு பிறந்து மொழியில் கலந்து எவ்வாறு பொருள் வேறுபட்டு உயிர் வாழ்கின்றன என்பதையும் இனி நீ அறிந்து கொள்வது அவசியமாகும்.

'தேவாசுர யுத்தம்' எனும் சொற்றொடர் ஒன்று மொழியில் உள்ளது. இதைத் தமிழ்படுத்தினால் ஆரியத் திராவிடப்போர் எனப் பொருள்படும்.

ஆரியர் தம்மைச் சுரர் என அழைத்துக்கொண்டனர். திராவிடமக்களை. சுரர் அல்லாதவர், (அசுரர்) நரர் எனும் சொற்களில் குறிப்பிட்டு வந்தனர். இவர்களுக்கிடையில் பண்டைக்காலத்தில் ஒயாது போர்கள் நடந்தவாறிருந்தன. அவற்றில் தேவேந்திரனுக்கும், விருத்திராசுனுக்கும் நடந்தபோர் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போரைப் பற்றிக் கல்லாடர் என்ற புலவர், கல்லாடம் எனும் தம்நூலில் குறிப்பிடுகிறார்.

'பைகுடப் பிறையெயிற் றாக்கனைக் கொன்று, வச்சிரத் தடக்கை வரைப்பகை சுமந்த - பழவுடல் காட்டும் தீராப் பெரும்பழி' - எனவும்,

'வட புலமன்னர் வாட அடல்குறித்து. இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி, இது நீ கண்ணியதாயின் இருநிலத்து யார்கொல் அளியர்தாமே', என்று மருதனிள நாகனாரின் புறநானூறில் ஆரிய திராவிடப்போரைக் குறித்து விவரிக்கின்றதைக் காணலாம்.

அந்தக் காலகட்டத்தில் பொதுமக்களுக்குள் இயல்பாக நாட்டைப் பற்றிப் பேச்சு வரும்போது, நீ எந்தக் கூட்டத்தை (வருக்கம்) ஆதரிக்கிறாய் எனும் வினா எழும்போது, நான் சுரவர்க்கத்தையே விரும்புகிறேன். எனவும், நான் நரவர்க்கத்தை ஆதரிக்கிறேன் எனவும், பேச்சுவாக்கில் பயின்று வந்த சொற்றொடர்கள்தாம் இவை இரண்டும்.

நீண்ட ஒரு காலப் போக்கில் தன் உருவிழந்ததுடன் பொருளும் இழந்துவிட்டது என்பதை நீ இனிமேலாயினும் புரிந்துகொள்ள வேண்டும்.

‘எப்படி உருமாறிற்று, பொருள் மாறிற்று', என்ற வினா உன் உளத்திலிருந்து வெளிவரவில்லை; ஆயினும் நான் உனக்கு விளக்கிக்கூறவே விரும்புகிறேன்.

34

கவிஞர் வெள்ளியங்காட்டான்