பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10. கம்பன் ஒரு சிறந்த
சினிமா டைரக்டர்


ன்றைய உலகம் சினிமா உலகம். சினிமாவிலே வருகின்ற காட்சி ஜோடனைகள், பாத்திரங்கள், அவர்கள் நடை, உடை பாவனைகள் அவர்களது உணர்ச்சி மிகுந்த நடிப்பு, மெருகேற்றும் பாடல்கள் எல்லாம் மக்கள் உள்ளத்தில் அழுத்தமாகப்படுகின்றன. நீங்கா நினைவாய் நிலைத்து விடுகின்றன. ஆதலால் இந்த சினிமா ஓர் அற்புதமான கலை என்று போற்றப்படுகிறது.

இந்தக் கலை இந்திய மண்ணில் தோன்றி எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டன. ஆதலால் இந்திய சினிமாவில் பொன்விழா இவ்வாண்டு நடைபெறுகிறது என்கிறார்கள். எனக்கு ஓர் ஐயம். இந்த அருங்கலை நமது தமிழ் மண்ணில் அடி எடுத்து வைத்து ஐம்பது வருஷங்கள் தானா ஆகிறது. இக்கலைக்கு அடிப்படை நாடகங்கள் தாமே. அந்த நாடகங்கள் தான் தமிழ்க் கலை உலகில் நீண்ட நாட்களாக இருந்து வந்திருக்கின்றன. இயல் இசை நாடகம் என்று நமது தமிழ் இலக்கியங்கள் அன்றே வகைப்படுத்தப்பட்டிருக்கிறதே. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயே சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியம் என்று போற்றப்பட்டிருக்கிறதே.