பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

53

இறைவனது அருளைத் துணைகொண்டு மனிதன் தனது கற்பனையினால் சிருஷ்டிப்பதுதான் கலை. கலை என்பது கற்பனை சிருஷ்டி கலை மனிதனுடைய அநுபவத்தின் மொழிபெயர்ப்பு என்று கூறலாம். மனிதன் ஜீவிப்பதே சிந்தனை செய்யத்தான். நான் சிந்திக்கிறேன். அதனால் நான் ஜீவிக்கிறேன் என்பதுதான் டேகாட் என்ற பிரஞ்சுத் தத்துவஞானி கண்ட உண்மை. மனிதன் தன் அறிவாற்றலால் ஆலோசிக்கும் காரியங்கள், உணர்ச்சிப் பெருக்கால் அவன் உள்ளத்தில் எழுகின்ற சிந்தனைகள் எல்லாம் விண் பார்க்கின்றன? ஆராய்ந்து பார்த்ததற்கும் இயலாத தத்துவங்களுக்குள்ளும் நுழைந்து எல்லா இடத்தும் பறந்து நிற்கும் இறைவனையும் கூட எட்டிப் பார்த்து விடுகின்றன. சிந்தனை செய்கிற மனிதன் தன் சிறுமையை மறந்து விடுகிறான். கற்பனா சக்தியாகிய புஷ்பக விமானத்தில் ஏறி ஆகாய வீதிகளில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகிறான். இந்த விதமாகச் சிந்தனையில் பிறக்கின்ற கற்பனா சிருஷ்டியை, சப்த சித்திரத்திலும், வர்ணப் பூச்சுக்களிலும், கல்லுருவங்களிலும் பரிணமிக்கும்படி செய்கிறவன் எவனோ அவனே கவிஞன். அவனே சித்திரக்காரன். அவனே சிற்பி அவர்களது சிருஷ்டியே கலை, கலை உண்மைக்கும் உலகியலுக்கும் மாறுபட்டதல்ல. உலகியலில் காணுகின்ற உண்மையை எடுத்துக்காட்டி மக்கள் உள்ளத்தில் எழும் உணர்ச்சிகளை ஓர் உன்னத நிலைக்கு உயர்த்துகிற திறம் படைத்ததுதான் கலை.

சூரிய உதயம் கலை அல்ல என்று கண்டோம். ஆனால் அதே சூரிய உதயத்தை,

தங்கம் உருக்கித் தழல் குறைத்துத் தேனாக்கி

எங்கும் பரப்பிய தோர் இங்கிதமோ

என்று ஒரு கவிஞன் கற்பனா சக்தியால் சப்த ஜாலத்தில் அமைத்துக் காட்டினால் அந்தச் சிருஷ்டி கலையாகிவிடுகிறது. திருக்குற்றால மலையும், அருவியும் கலையல்ல. ஆனால்