பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

107

இந்த முஸ்லிம் சகோதரர்கள் இருக்கும் ரதவீதியையும் தெருவையும் கடந்து மேற்கே வந்து தெற்கே திரும்பினால், ஒரு சிமிண்ட் போர்டு இருப்பதைப் பார்ப்பீர்கள். கம்பன் மேடு என்று எழுதியிருக்கும். பக்கத்தில் புதை பொருள் ஆராய்ச்சியாளர் நிறுத்தியிருக்கும். இரண்டு போர்டுகள் இருக்கும். கம்பன் காலத்தைப் பற்றி இரண்டு அபிப்பிராயம். ஒன்று ஒன்பதாம் நூற்றாண்டு என்று, இல்லை பன்னிரெண்டாம் நூற்றாண்டுதான் என்று. இந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள், இருவருக்கும் விரோதம் இல்லாமல் சராசரி விகிதம் பார்த்து தென்காசி வழக்காக பத்தாம் நூற்றாண்டில் பிறந்த கம்பன் என்று போட்டிருப்பார்கள். பொற்காசுகள் சில முன்பு கிடைத்ததாகச் சொல்கிறார்கள். தங்க சாலை அங்கிருந்திருக்கலாம் போலும். இதை வைத்துக் கொண்டு கம்பன் பொன் வாணிக மரபில் வந்தவன் தான் என்று ஆராய்ச்சியாளர் சொன்னால் ஆச்சர்யமில்லைதான். இந்தப் புனிதமான இடத்திற்குச் சென்ற நான் அங்கிருந்து சில ஒட்டாஞ்சல்லிகளை கம்பன் ஞாபகமாக எடுத்து வந்திருக்கிறேன். இப்படியே அங்கு செல்லும் தமிழர்கள் எல்லாம் செய்தால் மேடு, சமதளம் ஆகிவிடும் சில வருஷங்களில்

இந்தக் கம்பன் பிறந்த ஊரில் கம்பனுக்கு ஒரு கலைக்கோயில் கட்ட முயற்சி நடக்கிறது. கவர்னர் பிரகாசா அஸ்திவாரக் கல் நாட்டிவிட்டே சென்றுவிட்டார்கள். தமிழ் மக்கள் தான் அஸ்திவாரத்தின் மேல் கட்டிடம் எழுப்ப முனையவில்லை. பங்குனி உத்திரத்தில் கம்பன் திருநாள் நடக்கும் நாளில் இதற்கான உருப்படியான முயற்சிகள் நடந்தால் நல்லது. அதைச் செய்வார்களா தமிழ் தலைவர்கள்.

பி.கு. இப்போது கம்பன் மேட்டில் கட்டிடம் எழுப்பியிருப்பதாகத் தெரிகிறது.

❖❖❖