பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

எனது இயற் பெயர்

இப்பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் என்னோடு தொடர்புடைய சொல். தொடங்கும் சொல் எனது பெயரைக் குறிக்கும் பூ. முடியும் சொல்லும் பூ. இடையில் எல்லாத் தொடரிலும் பூ. என்னைக் குறிக்க 'மலர்' முதலிய வேறு பல சொற்கள் உள்ளன. ஆயிலும், இங்கு 'பூ' ஒன்றே அமைத் துள்ளது. இவ்வகைப்பில் ஓர் உண்மை பொதிந்துள்ளது. அவ் வுண்மை, 'பூ' என்பதே எனது இயற்பெயர் என்கின்றது. இஃதே எனது பொதுப்பெயரும் ஆகும்

இதனை நமது தமிழின் பழம்பெரும் இலக்கண நூலாம் தொல்காப்பியம் வழியாகவும் காணலாம். என்னைக் குறித்துப் பேசவேண்டிய இடங்களில் எல்லாம் தொல்காப்பியர் 'பூ' என்னும் சொல்லையே கையாண்டுள்ளார். 'மலர்' என்னும் சொல்லை ஓரிடத்தில் குறிக்கின்றார், அவ்விடத்திலும் எனது பெயராக அன்று. "மலர்தலை உலகத்து” என்று உலகத்திற்கு அடைமொழியாக அமைத்துள்ளார். மற்றும், 'அரும்பு' 'நனை' என்னும் சொற்களை அவரது கை காட்டுகின்றது. அவையும் எனது பெயராகக் குறிப்பதற்கு அல்ல. மரத்தின் உறுப்புகளாகப் பட்டியலிட்டுள்ளார். ‘அலர்' என்னும் சொல்லை ஐந்து இடங்களில் காணலாம். அச்சொல்லும் என்னைக் குறிப்பதற்கு அன்று. களவுக் காதல் வெளிப்பட்டு அலர்தலை - பரவுதலைக் குறிக்கும் பொருளைக் கொண்டது.

பொதுவாகச் சான்றோர் ஒரு நோக்கத்தில் ஒன்றை எழுதும் போது அவர்களது அறிவுத் திறத்தால் பிற கருத்துகளும் இயற்கையாக அவர்களது கைப்போக்கில் அமையும். தொல்காப்பியர் இப்பாங்கில் குறிக்கத்தக்கவர்.

'பூ' என்று அவர் முதன் முதலில் குறிக்கும் நூற்பா,

"பூ என் ஒரு பெயர்"

           -என்று தொடங்குகின்றது. 

இது வேறு ஒரு புணர்ச்சி இலக்கணத்திற்காக எழுந்த நூற்பா, ஆயினும், 'பூ' என்று எனக்குப் பெயர் இடுவது போன்று இஃது ஒலிக்கின்றது.