பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



16

உலகில் எங்கணும் பழங்கால முதலே இயற்கையில் அமைந்த பூஞ்சோலைகளும் செயற்கையில் அமைந்த பூங்காக்களும் நிறைந்திருந்தன.

உத்தியானம் எனப்படும் உய்யானம் என்னும் சொல் பூங்காக்களைக் குறிக்கும். அரசன் அரசியர் பொழுதுபோக்க விளையாடும் பூங்காக்கள் இவை தமிழகத்தில் இதுபோன்ற பூங்காக்கள் இருந்தன. இவை, 'பூம்பொழில்' என்றும் அழைக்கப்பட்டன. நெடுமுடிக்கிள்ளி மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்குதற்கு,

"சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு போதவிழ் பூம்பொழில் புகுந்தனன்'

-என மணிமேகலை குறிக்கின்றது. காப்பியங்களில் 'பூம்பொழில் விளையாட்டு' ஒர் அமைப்பாகும்.

கடவுள் வழிபாட்டிற்குரிய பூக்களைப் பெற 'நந்தவனம்’ என்னும் பூங்கா அனைத்துக் கோயில்களிலும் அமையலாயின. இதற்கெனவே தனியான அறக்கட்டளைகள் எழுந்தன.

கைலாயத்தில் சிவ கணத்தாரில் ஒருவர் வழிபாட்டிற்குப் பூக்கொய்யப் பூங்காவிற்குப் போனாராம். பூக்கொய்கையில் அங்கிருந்த அரசமகளிர் மேல் காமப்பார்வை போக்கினாராம். அக் குற்றத்திற்காக அவர் சுந்தரமூர்த்தியாக மண்ணுலகில் பிறக்க நேர்ந்தது. இக் கதையிலும் மேலுலகில் பூங்காக்களைக் காண்கிறோம்.

இறைவனை மலரால் வழிபட எண்ணிய இந்திரன் அதற்கென ஒரு பெரும் பூங்காவையே உண்டாக்க எண்ணினான். அவனுக்கெனப் பொன்னியாறே அவன் தவமிருந்த சோலையில் பாய்ந்தது. பொன்னி நீரின் வளத்தால் அவனது பூங்கா தழைத்து வளர்ந்ததெனக் கதையிற் சிறந்த கந்தபுராணம்,

'மேனிறை அடைகள் மல்கி, விரிதரு சினையும் போதும்
தானிரை கின்ற தம்மா சதமகன் வளர்த்த பூங்கா'34

-என்று வர்ணிக்கின்றது. இவ்வாறு இந்திரன் பூங்கா வளர்த்த கதையும் உண்டு.

__________

88 மணி : சிறைக்கோட்டம் 55 :56

84. கந் பு: இந்திரன் அருச்சனைப்படலம் 18