பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

 தென்னைமரத் தீவினிலே...

இன்று அந்த ஜீவநதிகள் இரண்டுமே அவன் வரை வற்றி விட்டன. ஒரே காலகட்டத்தில், தாயையும், தந்தையையும் இழந்து நிற்கும் அவன் ஒர் அனாதை... அனாதை... அவனால் அதற்கு மேல் சிந்திக்க முடியாமல் தலையே சுழல்வது போலிருந்தது. துயரம் பெரும் உருண்டையாகத் தொண்டையை அடைத்தது, “அம்மா...அம்மா...” என்று உள்ளம் கதறியது.

அந்தக் கதறலைக்கேட்டு ஆறுதல் கூறுவதைப் போல், “அருணகிரி நீ அனாதை இல்லை, உன்னை விட்டு நான் எங்குமே போய் விடவில்லை . என்னால் போகவும் முடியாது. நான்தான் ஒரு குழந்தையாக உன் கையில் தஞ்சம் அடைந்திருக்கிறேனே. இனி நீ வருந்தலாமா? இந்தப் பரிசுத்தமான அழகில், கபடமில்லாத உள்ளத்தில், கள்ளமில்லாத சிரிப்பில் நான் உன் கண்களுக்குத் தெரிய வில்லையா? என்னைப் பார்,” என்று அவனுள் யாரோ கூறும் குரல் கேட்டது,

கையில் இருக்கும் குழந்தை சிணுங்கியது.

அருணகிரி அந்தக் குழந்தையை மார்போடு அனைத்துக் கொண்டபடி, “வள்ளியம்மா!” என்று தன்னை மறந்து கத்தி விட்டான்.