பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முயலும் அவர்கள் தமிழுணர்வில் நின்றுதான் தங்கள் கருத்துக்களை வெளியிடுகிறார்கள். அவர்களது தமிழுணர்வு ஆழ்ந்தது. இதில் முரண்பாடு காணப்பட்டாலும் அவர்கள் தமிழுணர்வை ஒழிக்க முடியாது.

தமிழுணர்வும், பிரதேச உணர்வும் வளர்ந்த வரலாற்றைப் பற்றித் தனிநாயக அடிகளின் முடிவுகள் இவை.

இவ்வுணர்வின் வளர்ச்சியை முழுமையாக அறிந்து கொள்வதற்கு இவ்வுணர்ச்சியின் தோற்றம் முதல் இன்றுவரை அதன் வரலாற்றைச் சுருக்கமாக அறிந்துகொள்ளுதல் அவசியம்.

சரித்திர காலத்தில் தமிழ்நாடு நான்கு வகை நிலங்களாக இயற்கையாகவே பிரிந்திருந்தது. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன. குறிஞ்சி மக்கள் வேட்டுவ வாழ்க்கை மூலமாகவும், முல்லைநில மக்கள் மாடு வளர்ப்பதின் மூலமாகவும், மருத நில மக்கள் உழவுப் பயன் மூலமாகவும், நெய்தல் நிலமக்கள் மீன் பிடித்தல், உப்புக்காய்ச்சுதல் முதலிய தொழில்களின் மூலமாகவும், உணவும், உடையும், உறையுளும் பெற்று வாழ்ந்தனர்.

உழவுப் பயன் அதிகமாக அதிகமாக, மற்ற நிலப்பகுதிகளுக்குப் பண்டமாற்று வாணிபம் பரவிற்று. தமிழ் நிலப் பாகுபாடுகள் மறையத் தொடங்கின. இந்நிலையைத்தான் பத்துப் பாட்டும், புற நானூறும் சித்திரிக்கின்றன.

ஒவ்வொரு நிலப் பகுதியிலும் தோன்றிய கலைகள் நான்கு நிலப் பகுதிகளிலும் பரவின. இதனைப் பரப்பியவர்கள், பண்டைப் பாணர்களும், பொருநரும், விறலியரும் கூத்தரும், கூத்தியரும் ஆவார்கள். அவர்கள் நானிலங்களிலும் தோன்றி வளர்ந்த கலைகளைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பினர். கலை மரபுகளை அவர்கள் ஒருமுகப்படுத்தினர். இக்காலத்தில் தமிழகம் ஒன்றுபட்ட மரபின் நூற்றுக்கணக்கான குறுநில மன்னரும், முடியுடை மன்னர் மூவரும் சிறு சிறு நிலப் பகுதிகளில் ஆட்சி புரிந்து வந்தனர். பண்ட மாற்றும் கலைப் பரிவர்த்தனையும் தமிழகத்தில் ஒற்றுமையுணர்வைத் தோற்றுவித்தன.

49