பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டபோதும் வேலனை மறக்கவில்லை. உணவு தந்த வேலன் உணவு தராதபோதும் செழிப்பின் சின்னமாகிவிட்டான். அவனை அவர்கள் கற்பனையில் தங்களைவிட சக்தி மிகுந்தனவாகக் கருதித் தெய்வமாக வழி பட்டனர்.

மனிதன் வேட்டையாடி உணவு தேடிய காலத்தில் ஆண்களே வேட்டைத் தொழில் செய்தனர். அவர்களே சமுதாயத்தில் ஆதிக்கம் வகித்தனர். அதனால் பெண்கள் குகைகளிலும், குடிசைகளிலும் தங்கினர். அவர்கள் செடி, கொடிகளைக் கண்டனர். அவற்றின் இனப்பெருக்கத்தை அனுபவத்தில் கண்டனர். இயற்கையைப் பின்பற்றித் தாங்களும் கொட்டைகளைப் பூமியில் விதைத்தனர். விதைகளை நிலத்தில் ஊன்றினர். கிழங்குகளை நிலத்தை அகழ்ந்து புதைத்து மூடினர். அவை வளர்ச்சியுற்றுப் பலனளித்தன. இவ்வாறு பண்டைப் பயிர்த் தொழில் தோன்றிற்று. பயிர்த் தொழிலிலிருந்து, வேட்டைத் தொழிலிருந்து கிடைப்பதை விட அதிகமாக உணவு கிடைத்தது. முதலில் பெண்களே பயிர்த்தொழிலில் ஈடுபட்டனர். அவர்களே பயிர்த் தொழிலை கண்டுபிடித்தனர். பயிர்த் தொழில் செய்ய ஆள்பலம் வேண்டும். அதற்குரிய மக்களை ஈன்றதும், அவர்களுக்குப் பயிர்த்தொழிலைக் கற்றுக் கொடுத்ததும் பெண்களே. ஆண்கள் வேட்டைக்காக நெடுந்தூரம் சுற்றி அலைவார்கள். சில நாட்களுக்கு ஒருமுறையே குடில்களுக்குத் திரும்புவார்கள். ஆகவே பயிர்த் தொழிலின் தொடக்கக் காலத்தில் ஆண்களுக்கு அதில் அதிகப்பங்கு இருந்ததில்லை. குடும்ப வளர்ப்பிலும், அதிகப்பங்கு இருந்ததில்லை. பெண்களே புராதனப் பண்பாட்டை உருவாக்குவதில் முக்கியப் பங்கு பெற்றனர். வேட்டை முக்கியத் தொழிலாக இருந்தது மாறி பயிர்த் தொழில் முக்கியத் தொழிலாயிற்று. பயிர்த் தொழிலில் பங்கு பெற்ற பெண்களும் ஆண்களை விட உயர்வு பெற்றனர். தொல்குடிகளைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் அனைவரும் ஒருமுகமாக ஒப்புக் கொள்ளும் உண்மை இது.

இந்நிலையில் மனிதனது கருத்துக்களும் மாறின. பெண் ஆதிக்கச் சமுதாயம் தோன்றி வளரும் சரித்திர முற்காலத்தில் பெண் தெய்வங்கள் தோன்றின. பயிர்த் தொழில் செழிப்பைக் கொடுத்தது. ஆகவே

71