பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவர்கள் தமிழ் நாட்டினருக்கு அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் தென்திசை நோக்கிப் படையெடுத்து வந்தார்களென்பது அகநானூறு, 281ம் செய்யுள்ளால் விளங்கும். இதுவும் ஒரு சமீப கால நிகழ்ச்சியையே குறிப்பிடுகிறது. இவையனைத்தையும், ஒன்று சேர்த்துப் பார்க்கும்பொழுது, மோரியர் காலத்திலேயே இங்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பாடல்கள் எழுந்தன என்று உறுதியாகக் கருதலாம். இச்சான்றுகளைக் கொண்டு சுமார் கி.மு.321க்கும் கி.மு.156-க்கும் இடையில் மேற்கோள் காட்டப்பட்ட பாடல்கள் தோன்றியிருக்கக்கூடும் என்று முடிவு செய்யலாம். இன்னும் கூர்ந்து நோக்கினால் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து வேறொரு வழியாலும் அப்பாடலின் காலத்தைக் கொண்டு நிர்ணயிக்கலாம்.

ஆணைச் சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக்கி தர்மமே ஆணைக்கு அடிப்படையாக இருத்தல் வேண்டுமென்று அசோகன் பறை சாற்றினான். அவனுக்கு முன்பிருந்த சந்திரகுப்தனும், சாணக்கியனும் ராஜா ரீதியில் தண்டத்தையே முதன்மைப்படுத்தினார்கள். ‘ஆக்ஞா’ சக்கரத்தையும், தர்மச் சக்கரத்தையும் ஒன்றாக இணைக்க முற்பட்டவன் அசோகன். அவன் தனது கலிங்கப்போருக்கு முன்தண்டத்தையே நம்பியிருந்தான். கலிங்கப் போருக்குப் பின் அவன் புத்த தர்மத்தை மேற்கொண்டு தர்மச்சக்கரமே ஆக்ஞா சக்கரம் என்று பாறைகளிலும் கற்களிலும் எழுதி வைத்தான். இப்பாடலிலும் மோரியர் திகிரி என்பது மோரியர் ஆணைச் சக்கரத்தைக் குறிக்கிறது. கதிர்த்திகிரி என்பது அவர்கள் ஆட்சியின் சிறப்பைக் குறிக்கிறது. அவர்கள் நாட்டு அறத்துறை போன்றது. ஆதனுங்கனது அறத்துறை இங்கே அவர்கள் ஆணைச்சக்கரம் பரவிய இடங்களில் தர்மச்சக்கரம் பரவியிருந்தது என்ற கருத்தை கவிஞர் சுட்டிக் காட்டுகிறார். அப்படியாயின் இக்கருத்து அசோகன் காலத்தில் கலிங்கப் போருக்குப் பின் அவனுக்குத் தோன்றிய கருத்தாகும். அசோகனது முதல் பிரகடனம் கி.மு. 259 அசோகனது மரணம் கி.மு. 237. இக்காலத்தில் புத்தமதக் கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவின. எனவே இக்காலத்திலேயே மோரியர் பற்றிய இச்செய்யுள்கள் தோன்றியிருக்கலாம்.

85