பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அறிவியல் திருவள்ளுவம்

‘அளவை நூல்’ என்பதற்கு ‘அறிவை அளக்கும் நூல்’ என்று பொருள். அறிவால் அறிவை அளப்பதாகும். அறிவால் நூற்கருத்துக்களை அளந்தோர் தம் கருத்தை நிலைநாட்டக் கருத்துப் போரிட்டனர், அஃதாவது பட்டி மண்டபத்தில் சொற்போரிட்டனர். இப்போரில் தம்தம் பெருமையையும் பேச நேரும்; தம்மை வியந்து தருக்கியும் பேசினர். இவ்வாறு தருக்கொடு பேசுவது தருக்கம்’ எனப்பட்டது. சிறுபஞ்ச மூலம் என்னும் நூலிலும்[1] இச் சொல்லைக் காண்கின்றோம், இவ்வாறு அளவை நூல், “தருக்க நூல்” என்றும் வழங்கப்பெற்றது. இந்த அளவையை ஆங்கிலத்தார் Logic என்றனர். வடநூலார் “வாத சாத்திரம்” என்றனர்.

அறிவை அளக்கும் ‘அளவையியல்’ சில படிகளைக் கொண்டது. தமிழறிஞர் காண்டல் அளவை; கருதல் அளவை என இரண்டு படிகளாகக் கண்டனர். வடநூலார் பத்து (வேதவியாசர்) என்றும், எட்டு (கிருதகோடி) என்றும், ஆறு (சைமினி) என்றும் பல வகையாகக் கொண் டனர். கெளதம புத்தர் காண்டல், கருதல்' என்னும் இரண்டையே ஏற்றார். மணிமேகலைக் காப்பிய ஆசிரியர் சாத்தனார் இவற்றை விளக்கினார்.

திருவள்ளுவர்,

“ஆற்றின் அளவு அறிந்து கற்க” (125) என்றார். இதில் 'அளவு' என்பது அளவையியல் நூலைக் குறிக்கும். ஏன் கற்கவேண்டும் (?) என்பதற்குத் திருவள்ளுவர்,

“அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல்” என்று காரணமும் சொன்னார். “அவை அஞ்சா மாற்றம்


  1. காரியாசான்: சிறுபஞ்சமூலம்: 91-1.