பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

29


உலகில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்தில் புதராக மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, அறியாத்தனத்தை உணர்த்தி, அறிவின் மழுங்கலைக் கூர்மையாக்கி, சித்தத்தைத் தெளிவித்து, மனித சமுதாயத்தின் உயர்வுக்காக ஓய்வின்றி உழைத்த அந்த அரிய உயிர்-ஆத்ம ஒளி பரப்பிய அருள் சுடர்-புத்த ஞாயிறு, தன் வேலை முடிந்தது என்று கி.மு.480ல் ஒரு நாள் தனது 80வது வயதில் உலகப் பிணிப்பிலிருந்து விடை பெற்றுக் கொண்டது.

புத்தரின் வாழ்க்கையைப் பற்றிய விவரம் சரியாகக் கிடைக்கவில்லை. புத்தரே சொன்னதாகக் கூறப்படும் போதனை வாசகங்களிலிருந்து அவரது வாழ்க்கை வரலாற்றை அறிய முடியவில்லை. எந்த நேரமும் எங்கும் அவருடைய போதனைகள் மாறுபடாமலேயே இருந்தன.

புத்தரின் தோற்றப் பொலிவு அசாதாரணமான கவர்ச்சியுடன் இருந்திருக்கிறது. கோபுரக் கலசம் மின்னுவதைப் போன்ற ஒளி முகம், அகன்ற நெற்றி, வளைந்து கருத்த புருவங்களின் கீழே நீலம் பாய்ந்த ஆழ்ந்த கருவிழிகளின் குளுமை புன்னகை சிந்தும் மலர் இதழ்கள், அகன்ற மார்பு, நீண்ட தளிர்க்கரங்கள், முத்துப் பற்கள், பவள வாய், தண்ணொளி பரப்பும் நிலா முகம், சீயம்போன்ற முன் தோற்றமும், பிடி களிறின் கம்பீர நடையும் அவருக்குண்டு. இத்தனைக்கும் மேலாகக் கேட்டாரைக் கவரும், கேளாரை ஈர்க்கும் இசைக் குரல்.

புத்தருடைய போதனைகளை அறியுமுன், அவர் காலத்தில் இந்த நாடு இருந்த நிலையை, கடைப்பிடித்து வந்த கொள்கைக் கோட்பாடுகளை, கொண்டாடிய பழக்க வழக்கங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

நாடு பல பிரிவுகளாகி சிற்றரசர்களாலும், பிரபுக்களாலும் ஆளப்பட்டு வந்தது. உயர்ந்த நாகரிகமும், பொருளாதார செழிப்பும் இருந்தது. முன்னேற்றமடைந்த வகுப்பினராக பிராமணர்களும் பிரபுக்களும் விளங்கினர். மத தத்துவ