பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

வேங்கடம் முதல் குமரி வரை

அறையணிநாத ஈசுவரர் இருக்கிறார். அருள்நாயகியோ தனித்த சிறு கோயிலில் கிழக்கு நோக்கி நிற்கிறாள். கோயில் வாயிலில் வலம்புரி விநாயகர் சுவரோடு சுவராக ஒட்டிக் கொண்டிருக்கிறார். விரசண்ட ரிஷி பூசித்த தலம் என்பார்கள். இவர்களையெல்லாம் வணங்கிவிட்டுத் திரும்பலாம். கோயிலுக்குக் கிழக்கிலும் தெற்கிலும் பாறையிலேயே ஒரு பெருங் குளம் இருக்கிறது. அக்குளக் கரையிலே பஞ்ச பாண்டவர் குகை ஒன்றும் உண்டு. அதில் ஐந்து அறைகளும், திரௌபதைக்கு என்று ஒரு சிற்றறையும், ஒரு சிறு சுனையும் இருக்கின்றன. ஏதோ ஜைன முனிவர்கள் தங்க அமைத்த குடைவரைச் சைத்தியமாக இருக்க வேண்டும். ஐந்தும் ஒன்றும் சேர்ந்து ஆறு அறைகள் இருப்பதனால், பஞ்ச பாண்டவர்களின் தொடர்பு ஏற்படுத்திப் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. மாமல்லபுரத்தில் ஐவர் ரதம் என்று கூறுவது போல, இங்கும் இக்குகைகள் பஞ்சபாண்டவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இத் திருக்கோவலூர் ஏதோ சமயப் பிரசித்தி மட்டும் பெற்ற ஊரில்லை. நல்ல இலக்கியப் பிரசித்தியும் பெற்றுள்ள ஒரு பழைய நகரம், சங்க காலத்திலே மலையமான் நாடு மலாடு என்று புகழுடையதாக இருந்திருக்கிறது, வள்ளல் பாரி மகளிராம் அங்கவை சங்கவையை மணம் புரிந்த தெய்வீகன் இருந்து அரசாண்ட இடம். இவன் வழி வந்தவர்களே மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர் முதலியோர், இந்தத் தெய்வீகனோ மலையமான் திருமுடிக்காரியின் வழித் தோன்றல். இந்தத் திருமணத்தை முடிப்பதையே தம் கடமையாகக் கொண்டவர் பாரியின் நண்பர் புலவர் கபிலர். திருமணம் முடிந்த பின்னர் இத்திருக்கோவலூரிலேயே ஒரு பாறை மீது எரி வளர்த்து அதில் வீழ்ந்து முத்தி எய்தித்தம் ஆருயிர் நண்பர் பாரி சென்ற இடம் சேர்ந்தார் என்பது வரலாறு. இதைச் சொல்கிறது ஒரு கல்லிலே பொறித்த கவிதை.