பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வேங்கடம் முதல் குமரி வரை

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்
வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம்போல்
மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்
பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே

அப்பர் பாட்டுக்கு, ஒரு சிறிய திருத்தம். வெறும் மனித்தப் பிறவி மட்டும் போதுமா? நடராஜனது திருநடனத்தை அனுபவிக்கும் அனுபவத்தோடு ஒட்டிய பிறவி, தமிழ் மனிதப் பிறவியாகவும் இருக்க வேண்டாமா? இந்தச் சமயத்தில் நம் உள்ளத்தில் ஓர் ஐயம் எழும். சித்சபையில் நடனம் ஆடுகிறான் நடராஜன். அப்படி அவன் ஆடுவது ஒரு பெரிய சிதம்பர ரகசியம் என்பார்களே! அப்படி ஒன்றும் காணோமே, நடராஜன் ரகசியமாக ஆடவில்லையே, நல்ல பகிரங்கமாகத்தானே ஆடிக் கொண்டிருக்கிறான் என்றெல்லாம் எண்ணத் தோன்றும். அப்போது அந்தச் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலையும் திறப்பார்கள். திரையை அகற்றுவார்கள், ஆரத்தி காட்டுவார்கள். நாம் உற்றுப் பார்த்தாலும் அங்கு ஒன்றும் தோன்றாது. ஏதோ தங்கத்தால் ஆன வில்வதள மாலை ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பது மாத்திரமே தெரியும். 'இங்கு தான் மூர்த்தி ஒன்றும் இல்லையே, எதற்கு வில்வதளம், எதற்கு ஆரத்தி?' என்று கேட்போம் நாம். அதுதான் 'ரகசியம்'. இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறான் என்பதால், அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் அவனை எந்த உருவில் வணங்குவது? நல்ல வெறும் வெளியையே இறைவனாக வழிபட வகை செய்திருக்கிறார்கள். ஆம் இறைவன் 'வான் நின்று இழிந்து வரம்பு.இகந்த மாபூதத்தின் வைப்பும் எங்கும் ஊனும்