பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

45

உண்மையில் இந்தக் கிராமமே, ரெவின்யூ கணக்குகளில் திருவரங்கம் என்று பதிவாகி இருக்கிறது. இங்குள்ள அரங்கநாதனே தமிழ்நாட்டில் உள்ள சயனத் திருக் கோலங்களில் அளவில் பெரியவர். அத்துடன் ஒரு சிறப்பும் கூட, சீதேவியின் மடியில் தலை சாய்த்துப் பூதேவி அடி வருடப் பள்ளிக்கொள்கிறார். வலக்கையைத் தலைக் கணைத்து, இடக்கையை உயர்த்தி, பிரம்மாவுக்கு உப தேசிக்கின்ற நிலை. சுதையில் உருவானவரே என்றாலும், தைலக்காப்பு எல்லாம் இல்லாமல் அழகாக இருக்கிறார். உலகளந்தார் நீண்டு வளர்ந்தவர் என்றால் இவர் நீட்டிப் படுக்க இருபத்து நான்கு அடி நீளம் உள்ள படுக்கை வேண்டியிருக்கிறது. அத்தனை பெரிய வடிவத்தார் அவர்.

இந்தத் திருவரங்கம் பெரிய கோயில் என்றாலும், கோயிலின் முன் முகப்பும் பல பாகங்களும் சிதைந்தே கிடக்கின்றன. காவிரித் திருநதியிலே துயிலும் கருணைமா முகிலுக்கு அடித்த அதிர்ஷ்டம் இவர் பங்கில் இல்லை . இங்கும் தாயார் சந்நிதி உண்டு. ராமர், ஆண்டாள் எல்லாம் நல்ல அழகிய வடிவங்கள். இத்தனை அழகிய ஆண்டாளை வேறு கோயில்களில் நான் காணவில்லை. ஆனால் அவளோ அங்கு, கேட்பாரற்று நிற்கிறாள். ஆண்டாளை வணங்கியபின், அங்கு நிற்கவே தோன்றாது நமக்கு. தமிழ் நாட்டில் இவளைப்போல் எத்தனை சிற்ப வடிவங்களோ? இன்னும் பழுதுற்று நிற்கும் கோயில்கள்தான் எத்தனை எத்தனையோ என்ற நம் சிந்தை அலையும். ஆதலால் திரும்பவும் திருக் கோவலூருக்கே வந்து, அங்கு பார்க்காமல் விட்டுப்போன வீரட்டேசுவரரைத் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பி விடலாம்.

திருக்கோவலூர் கீழூரில், ஆற்றங்கரைப் பக்கம் உள்ள கோயிலில் மேற்கே பார்த்து நின்று கொண்டிருக்கிறார். பிறப்பே இல்லாத சிவனுடைய மூர்த்தங்கள் அனந்தம். அவற்றுள் அறுபத்து நான்கை வகைப்படுத்தி அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் என்று சிவ