பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

119

கலைஞானம் கல்லாமே
கற்பித்தானை, கடுநரகம் சாராமே
காப்பான் தன்னை
பலவாய வேடங்கள் தானே
ஆகிப் பணிவார்கட்கு
அங்கங்கே பற்றா னானை
சிலையால் புரம் எரித்த
தீ ஆடியை, திருப்புன்கூர்
மேவிய சிவலோகனை

நினைந்து நினைந்து பாடிய நாவுக்கரசர் பாட்டு எவ்வளவோ அரிய உண்மைகளையெல்லாம் வெளியிடுவதாக இருக்கிறது. அப்பரும் சம்பந்தரும் சும்மாப் பாடிப் பரவுவதோடு நிறுத்தினால் இங்கு எழுந்தருளிய சுந்தரர் சிவலோகனுக்கு நிலம் சேர்த்து வைக்கவே முனைந்திருக்கிறார். சோழ நாட்டிலே ஒரு காலத்தில் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. மழையே பெய்யாமல் வறண்டிருக்கிறது. கோன்நோக்கி வாழும் குடிகள் வான் நோக்கி வருந்தி இருக்கிறார்கள். சோழ மன்னன் வேறே தைந்து உருகியிருக்கிறான். அவன் திருபுன்கூருக்கு வந்திருந்த அன்றே சுந்தரரும் தனது சுற்றுப் பிரயாணத்தில் அங்கு வந்து சேர்ந்திருக்கிறார். அரசனும் குடிகளும் மழை வளம் இல்லாது நாடு வறண்டிருப்பதைக் கூறுகிறார்கள். 'சரி பன்னிரண்டு வேலி நிலத்தைக் கோயிலுக்கு எழுதித் தருகிறீர்களா?” என்று கேட்டிருக்கிறார். அப்படியே எழுதிக் கொடுத்திருக்கிறான் மன்னன். உடனே பாடியிருக்கிறார் சுந்தரர். அவ்வளவுதான்; மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. மக்களும் மன்னனும் குதூகலத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஆனால் பெய்ய ஆரம்பித்த மழை பெய்து கொண்டேயிருக்கிறது. நாள் ஒன்று இரண்டு என வளர்ந்து பத்து நாட்களாகியும் நிற்கக் காணோம். மழை போதும் போதும் என்ற பின்னும் நிற்காவிட்டால் கஷ்டந்தானே. 'ஐயனே! மழையை நிறுத்தும்'