பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221

24

வீழி மிழலையார்

'எந்தப் பொருள் ஒன்று இல்லாதிருந்தால் இந்திய நாட்டின் கலை அழகு சிறப்பாக இராது?' என்று ஒரு கேள்வி. இந்தக் கேள்வியை நம்மிடம் கேட்டிருந்தால் நாம் விழித்திருப்போம். இந்தக் கேள்வியைக் கலாரசிகர் ஆனந்தக் குமாரசாமியிடமே ஒரு நண்பர் கேட்டிருக்கிறார். அவர் கொஞ்சமும் தயங்காமல் பதில் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லிய பதில் 'தாமரை' என்பது தான். கவிதை, காவியம், சிற்பம், சித்திரம், இசை, நடனம் முதலிய அருங்கலைகள் அனைத்தினுக்குமே உயிர் நிலையான பொருளாக அல்லவா தாமரை இருந்து வந்திருக்கிறது. 'பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை' எனக் கவிஞன் பாடுவான். ஏன், தூய்மைக்கே எடுத்துக் காட்டாகக் கூறப்படுவது தாமரைதானே. கமலம் பதுமம் எல்லாம் சிற்ப உலகிலும், சித்திர உலகிலும் பிரசித்தமானவையாயிற்றே! முகை அவிழ்தாமரையை நடனம் ஆடும் பெண் முத்திரையாகக் காட்டுவதில்தான் எத்தனை எத்தனை அழகு. நிரம்பச் சொல்வானேன்? அலைமகளும் கலைமகளும் இன்னும் எண்ணற்ற தேவர்களும் இருப்பிடமாகக் கொண்டிருப்பது தாமரையைத்தானே. புத்தரும் அருகனும்கூட ‘மலர்மிசை ஏகினான்' என்றுதானே அழகுணர்ச்சியைத் தூண்டி