பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

வேங்கடம் முதல் குமரி வரை

தான் தோன்றி அப்பருக்கு 'ஆயிரத்து ஒருவர்' என்ற பெயர் நிலைத்திருக்கிறது. கதை இதுதான். சோழ அரசன் ஒருவன் ஆயிரம் பெயருக்கு அன்னம் அளிப்பது என்று சங்கல்பம் செய்து கொள்கிறான். எண்ணிக்கையில் கொஞ்சமும் குறைத்து சங்கல்பம் தவறிவிடக் கூடாதே என்று எண்ணி ஆயிரம் இலைகளைப் போட்டு விட்டு வந்திருந்த அந்தணர்களை எண்ணுகிறான் (அப்போதெல்லாம் பட்டினிப் பட்டாளம் நாட்டில் கிடையாதே. சாப்பாட்டுக்கே ஆள் பிடிக்கத்தானே வேண்டியிருக்கும்) வந்திருப்பவர்களை எண்ணினால் 999 பேர்கள்தான் இருந்தார்கள். கொஞ்சம் காத்திருந்து பார்த்து, ஒருவருமே வராததுகண்டு மன வருத்தத்தோடேயே வந்தவர்களை இலைகளில் உட்காரச் சொல்லிப் பரிமாற ஏற்பாடு செய்கிறான். பரிமாறிய பின் இலை ஒன்றுமே காலியாக இருக்கக் காணோம். இது என்ன? என்று புரியவில்லை அரசனுக்கே. உண்டுவிட்டு அந்தணர்கள் வெளியே போனபோது திரும்பவும் ஒவ்வொருவராக எண்ணிப் பார்க்கிறான். 999 பேர்தான் இருக்கிறார்கள். இது என்ன அதிசயம் என்று வியந்து நின்றபோது, இறைவனே அசரீரியாக 'அரசனே நாமே ஆயிரத்தில் ஒருவராக கிழவேதிய வடிவில் வந்து உன் சமாராதனையில் கலந்து கொண்டோம் மெத்த மகிழ்ச்சியோடு' என்கிறார். இறைவனது அருளை எண்ணி அரசன் மகிழ்கிறான். ஆயிரம் திருநாமம் படைத்தவன், ஆயிரத்தில் ஒருவனாக அங்கு வந்திருக்கிறான். இந்த ஆயிரத்தொருவராம் இறைவனைக் காணவே ஆக்கூருக்குச் செல்கிறோம் நாம்.

ஆக்கூர், மாயூரம்-தரங்கம்பாடி ரயில் பாதையில் உள்ள ஒரு சிறிய ஊர். ஆக்கூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அரை மைல் நடந்தால் ஊர் போய்ச் சேரலாம். இல்லை. மாயூரம் ஜங்ஷனில் இறங்கி காரிலோ, பஸ்ஸிலோ, வண்டியிலோ பத்து மைல் கிழக்கு நோக்கிச் சென்றாலும்