பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

149

துடைக்கும் தேவியாக இருப்பதனாலேதான் ‘கரும்பினில் கட்டி போன்ற கடவூர் வீரட்டானரை' விடப் புகழ் பெற்றவளாக விளங்குகிறாள். ஆம்! இந்தக் காலத்தில் யார் நீண்ட நாள் வாழவேண்டும் என்று விரும்புகின்றார்கள்? இருக்கின்ற நாட்களில் நோய் நொடி இல்லாது இன்னல் இடர் இல்லாது, வாழ்வதைத்தானே விரும்புவார்கள். அதை அருளுபவள்தானே அபிராமி.

இத்தலத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ கூறலாம். ஏழு கன்னிகைகள், துர்க்கை முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்றிருக்கிறார்கள். தன் மனைவியின் தாலியை விற்றுக் குங்கிலியத் தொண்டைச் செய்த குங்கிலியக் கலையரும், அரசனிடம் பொருள் பெற்றுப் பல திருப்பணிகள் செய்த காரிநாயனாரும் அவதரித்து முத்தி பெற்றிருக்கிறார்கள். தேவாரம் பாடிய மூவரும் இத் தலத்துக்கு எழுந்தருளிக் கடவூர் வீரட்டனாரைக் கசிந்து பாடி இருக்கிறார்கள். இம்மட்டோடு இக்கோயில் சரித்திரப் பிரசித்தியும் பெற்றிருக்கிறது. ஐம்பத்து நாலு கல்வெட்டுக்கள் இக்கோயிலில் இருக்கின்றன. சோழ மன்னர்களில் ராஜராஜனும் ராஜேந்திரனும் இன்னும் முதற் குலோத்துங்கன் விக்கிரமன் முதலியவர்களும், பாண்டிய மன்னர்களில் மாறவர்மன், கோனேரின்மை கொண்டான், விஜயநகர மன்னர்களில் கிருஷ்ண தேவராயர், வீர விருப்பண்ண உடையார் முதலியவர்களும் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கோயிலைக் கட்டவும் நிபந்தங்கள் ஏற்படுத்தவும் செய்திருக்கிறார்கள் என்று இக்கல் வெட்டுக்களால் அறிகிறோம். இக்கோயில் இன்று தருமபுர ஆதீனத்தலைவர் ஆளுகையில் இருக்கிறது; மிக்க சிறப்போடு பரிபாலிக்கிறார்கள். அபிராமியை அழகு செய்து பார்ப்பதிலே மகா சந்நிதானம் அவர்களுக்கு மிக மிக ஆர்வம்; அதை அங்கு சென்றால் நேரிலேயே பார்க்கலாமே.