பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

வேங்கடம் முதல் குமரி வரை

இத்தல வரலாற்றிலே திருமால் கண்ணிடத்து அருச்சித்த செயலுக்கு அடுத்தபடி சிறப்புடையது சம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு அருளியது தான்.

வீழிமிழலை நேத்திர அர்ப்பண ஈஸ்வரர்

ஞானசம்பந்தரும், அப்பரும் சேர்ந்தே வருகிறார்கள் இத்தலத்துக்கு, இவர்கள் வரும் போது நாடெல்லாம் பஞ்சம். மக்கள் எல்லாம் உண்ண உணவில்லாது மயங்குகிறார்கள். இந்த நிலையில் இவர்களுடன் வந்த அடியவர்களுக்கு உணவு அளிப்பது என்பதும் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இரண்டு சமய குரவர்களும் கோயிலுள் சென்று இறைவனை வணங்குகிறார்கள்; திருப்பதிகங்கள் பாடுகிறார்கள். மறுநாள் காலையில் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருக்கிறது. ஒருவருக்கும் தெரியாமல் இரவோடு இரவாகவே, இறைவன் கட்டளைப்படி படிக்காசுகளை வைத்தருளிய படிக்காசுப் பிள்ளையாரும் மேற்கு பலிபீடத்தருகிலேயே உட்கார்ந்து கொள்கிறார். விடிந்தபின் பலிபீடங்களில் படிக்காசு இருப்பதை அறிந்து, சம்பந்தரும், அப்பரும் எடுத்து அவற்றைக் கொண்டு அடியவர்களுக்கு அமுதளிக்கிறார்கள்.